'டீமெட்' வடிவில் பங்குகளை வைத்திருப்பது போல, இனி காப்பீடு பாலிசிகளையும் 'டிஜிட்டல்' வடிவில் பராமரிக்கலாம். காப்பீடு பாலிசிகளை டிஜிட்டல் வடிவில் பெறும் வசதி ஏற்கனவே இருந்தாலும், விருப்பத் தேர்வாக இருந்த இந்த வாய்ப்பை காப்பீடு ஆணையம் கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்திய காப்பீடு ஆணையத்தின் உத்தரவை அடுத்து, ஏப்ரல் 1ம் தேதி முதல், காப்பீடு நிறுவனங்கள் டீமெட் வடிவில் மட்டுமே பாலிசிகளை வழங்க வேண்டும். இந்த பாலிசிகளை மின்னணு முறையில் பராமரிக்கலாம். டீமெட் வடிவில் பாலிசிகளை பெறுவது மற்றும் இதன் பலன்களை பார்க்கலாம்.-மின்னணு கணக்கு:
பாலிசிகளை பெற மின்னணு கணக்கு துவக்குவது எளிதானது. புதிய பாலிசிகளை வாங்கும் போது, காப்பீடு நிறுவனங்களே பொதுவாக மின்னணு கணக்கை துவக்கி தந்துவிடும். இந்த சேவையை வழங்கும் நான்கு நிறுவனங்களில் ஒன்றின் மூலம் வாடிக்கையாளர்களும் மின்னணு கணக்கை துவக்கலாம்.மின்னணு பாலிசி:
புதிதாக எந்த காப்பீடு பாலிசி பெறுவதாக இருந்தாலும், இனி டீமெட் வடிவில் தான் பெற முடியும். டீமெட் என்பது, காகிதம் இல்லாமல் டிஜிட்டல் அல்லது மின்னணு வடிவில் பாலிசி ஆவணத்தை பெறுவதாகும். இதற்கென தனியே மின்னணு காப்பீடு கணக்கு வைத்திருக்க வேண்டும்.
பத்திர வடிவம்:
பாலிசிகள் டிஜிட்டல் வடிவில் வழங்கப்பட்டாலும், வாடிக்கையாளர் விரும்பினால் காகித வடிவில் பாலிசியை கோரி பெற்றுக் கொள்ளலாம். அது போல, ஏற்கனவே உள்ள பாலிசிகளை மின்னணு வடிவில் மாற்றிக் கொள்ளலாம். அனைத்து பாலிசிகளையும் ஒரே இடத்தில் பராமரிக்கலாம்.டிஜிட்டல் ஆவணங்கள்
: மின்னணு காப்பீடு கணக்கை துவக்க, உரிய டிஜிட்டல் காப்பீடு சேவை நிறுவனங்களின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை 'டவுண்லோடு' செய்து, கே.ஒய்.சி., நடைமுறையை பூர்த்தி செய்ய வேண்டும். ஆதார் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். 'டிஜிலாக்கர்' மூலமும் கணக்கு துவக்கலாம்.டிஜிட்டல் பலன்கள்:
மின்னணு வடிவில் பாலிசிகளை பெறுவதும், பராமரிப்பதும் பலவித பலன்களை அளிக்கும் என கருதப்படுகிறது. முதலில் எல்லா பாலிசிகளையும் ஒரே இடத்தில் வைத்து பராமரிக்கலாம். பாலிசி ஆவணங்களை தவறவிடும் பிரச்னையும் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் பாலிசி தகவல்களை அணுகுவதும் எளிதாகும்.