1,000 மெகா வாட் பேட்டரி ஸ்டோரேஜ் : 30% பணியை பெற விரும்பும் சிறுதொழில்கள்
சென்னை; தமிழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு, 1,000 மெகா வாட் திறன் உடைய சூரிய மின்சாரத்தை சேமித்து, திரும்ப பயன்படுத்தும் வகையில், 'பேட்டரி ஸ்டோரேஜ்' கட்டமைப்பை, அரசு ஏற்படுத்த உள்ளது. அதில், 30 சதவீத கட்டமைப்பை உருவாக்கும் பணி தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரிடம் எழுந்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுதும் சூரியசக்தி மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் உடனுக்குடன் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த மின்சாரம், 'பேட்டரி ஸ்டோரேஜ்' எனப்படும் அதிக திறன் கட்டமைப்பில் சேமிக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை நம் நாட்டிலும் மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு, 1,000 மெகா வாட் சூரியசக்தி மின்சாரத்தை சேமித்து, மீண்டும் பயன்படுத்தும் வகையில் பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்பை ஏற்படுத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை, மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் செயல்படுத்த உள்ளது.இத்திட்டத்தின் கீழ், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, துணைமின் நிலையங்களில் பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அந்நிறுவனம், மின் வாரியம் வழங்கும் சூரியசக்தி மின்சாரத்தை, பேட்டரி ஸ்டோரேஜில் சேமித்து, கேட்கும் போது திரும்ப வழங்க வேண்டும். இதற்காக, யூனிட்டிற்கு நிர்ணயிக்கப்படும் கட்டணம் வழங்கப்படும். தமிழகம் முழுதும் ஸ்டோரேஜ் கட்டமைப்பு ஏற்படுத்தும் ஒப்பந்த நிறுவனங்களை தேர்வு செய்ய விரைவில், 'டெண்டர்' கோரப்பட உள்ளது. இதுகுறித்து, தமிழக சூரியசக்தி மின்உற்பத்தியாளர்கள் சங்க பொருளாளர் சாஸ்தான் எம்.ராஜா கூறியதாவது:இந்தியாவில் சிறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகம் இருப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது, ஒரு மணி நேரத்திற்கு, 1,000 மெகா வாட் மின்சாரத்தை சேமித்து பயன்படுத்தும் பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்பை உருவாக்கும் பணிக்கு பொதுவாக டெண்டர் கோரினால், பெரிய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும். சிறு நிறுவனங்களால் பங்கேற்க முடியாது.எனவே, 1,000 மெகா வாட் பேட்டரி ஸ்டோரேஜில், 25 - 30 சதவீத அளவை சிறு தொழில்களுக்கு ஒதுக்கும் வகையில், விதிகளை ஏற்படுத்த வேண்டும். இதனால், சிறுதொழில் நிறுவனங்கள் பயன்பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்புக்கு மெகா வாட்டிற்கு, 4 கோடி ரூபாய் வரை செலவாகும் மத்திய அரசு, 'வையாபிலிட்டி கேப் பண்ட்' திட்டத்தின் கீழ் ஊக்குவிப்பு நிதியுதவி வழங்க உள்ளது செலவில் 1 மெகா வாட்டிற்கு, ரூ.20 லட்சம் (அ) 20% இதில் எது குறைவோ, அந்த நிதி வழங்கப்படும்