குத்தகைக்கு வரும் திருச்சி உட்பட 11 ஏர்போர்ட்கள்
புதுடில்லி, திருச்சி உட்பட 11 விமான நிலையங்களை குத்தகைக்கு விடும் நடைமுறைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், ராய்ப்பூர் உட்பட 11 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் மறுஆய்வு செய்து ஒப்புதல் அளித்தது. தனியார், பொது கூட்டு அடிப்படையில், சிறிய விமான நிலையங்களுடன் இந்த விமான நிலையங்களை இணைத்து குத்தகைக்கு விடுவதற்கு ஏல நடவடிக்கையை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதி, கயா, ஹுப்பள்ளி, சம்பாஜிநகர், ஜபல்பூர், குஷிநகர் ஆகிய ஆறு சிறிய விமான நிலையங்களுடன் மேற்கண்ட ஐந்து விமான நிலையங்களை இணைத்து குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது.