உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மாதம் 12 லட்சம் ஜோடி சாக்ஸ் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி

மாதம் 12 லட்சம் ஜோடி சாக்ஸ் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி

திருப்பூர்: திருப்பூரில் இருந்து மாதம், 12 லட்சம் ஜோடி 'சாக்ஸ்' ஏற்றுமதி செய்யப்படுகிறது. குளிர் பிரதேச நாடுகளில், ஆண்டு முழுதும் குளிர் நிலவுவதால், அந்நாட்டு மக்கள் அன்றாடம், 'சாக்ஸ்' மற்றும் 'ஷூ' அணிந்து குளிரை சமாளிக்கின்றனர். நாகரீக வளர்ச்சியால், இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் ஷூ பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், 'சாக்ஸ்' தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில், 'சாக்ஸ்' உற்பத்தியில் துருக்கி முன்னோடியாக இருந்து வந்தது. நம் நாட்டில், புனேவில் உள்ள நிறுவனங்கள், 'சாக்ஸ்' உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில், கடந்த, 20 ஆண்டு களாக, 'சாக்ஸ்' உற்பத்தி படிப்படியாக அதிகரித்தது. துருக்கியில் பண வீக்கம் மற்றும் பொருளாதார பிரச்னை காரணமாக, 'சாக்ஸ்' வர்த்தகம் சரிந்துள்ளது. இது, நம் நாட்டுக்கு சாதகமாக மாறியுள்ளது. பருத்தி நுாலிழையில் தயாரிக்கப்படும், மதிப்பு கூட்டப்பட்ட இந்திய 'சாக்ஸ்'க்கு, சர்வதேச சந்தையில் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. மொத்தம் 12 ஜோடி சாக்ஸ், 500 முதல் 850 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பான, அபாட் தலைவர் இளங்கோவன் கூறியதாவது: கடந்த, 2001ல், திருப்பூரில் 'சாக்ஸ்' உற்பத்தி துவங்கியது. ஆரம்ப கட்டத்தில், ஏற்றுமதி செய்வது சவாலாக இருந்தது. தற்போது, மாதந்தோறும், 12 லட்சம் ஜோடி சாக்ஸ், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஒரு நிறுவனம் மட்டுமே, 'சாக்ஸ்' உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்து வந்த நிலை மாறி, தற்போது முன்னணி நிறுவனங்களும், 'சாக்ஸ்' உற்பத்தி யூனிட்களை துவக்கியுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ