உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஹூண்டாய் பங்குகள் கேட்டு 2.30 மடங்கு விண்ணப்பங்கள்

ஹூண்டாய் பங்குகள் கேட்டு 2.30 மடங்கு விண்ணப்பங்கள்

புதுடில்லி:பொது பங்கு வெளியீட்டிற்கு வந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு, முதலீட்டாளர்களிடம் இருந்து 2.30 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஹூண்டாய் மோட்டார் இந்தியா, பொது பங்கு வெளியீடு வாயிலாக 27,870 கோடி ரூபாயை திரட்ட முன் வந்துள்ளது. இதற்கான, விண்ணப்ப வினியோகம் கடந்த அக்., 15ம் தேதி துவங்கியது. ஒரு பங்கின் விலை 1,865 -- 1,960 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், கிட்டத்தட்ட 9.98 கோடி பங்குகளுக்கு, 23.63 கோடி அளவுக்கு பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, 2.30 மடங்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்தியாவில், எல்.ஐ.சி., பொது பங்கு வெளியீடு வாயிலாக 21,000 கோடி ரூபாய் திரட்டியதே அதிகபட்ச ஐ.பி.ஓ.,வாக இதுவரை இருந்தது. இதனை தற்போது ஹூண்டாய் முந்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், பொது பங்கு வெளியீட்டிற்கு வரும் முதல் ஆட்டோமொபைல் நிறுவனம் என்ற பெயரையும் ஹூண்டாய் மோட்டார் பெறுகிறது.முன்னதாக, கடந்த 2003ம் ஆண்டு, ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான சுசூகியின் இந்திய நிறுவனம், பொது பங்கு வெளியீட்டுக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஆலை நவீனமயம்

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், தன் சென்னை ஆலையை 1,500 கோடி ரூபாய் செலவில், புதுப்பித்து, நவீனமயமாக்க திட்டம் தயாரித்துள்ளது. தற்போது, கிட்டத்தட்ட 538 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையில், ஆண்டுக்கு 8.50 லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், தற்போதைய 5.40 லட்சம் சதுர மீட்டர் ஆலை கட்டடத்தின் பரப்பளவை, 7.21 லட்சம் சதுர மீட்டராக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதனால், கூடுதலாக 155 பேருக்கு வேலை கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை