கிடங்குகளில் 3 கோடி டன் பழைய அரிசி தேக்கம்; வெளிச்சந்தையில் வாங்குவோரில்லை
சென்னை; இந்திய உணவுக் கழக கிடங்குகளில், 3 கோடி டன்னுக்கும் அதிகமாக, மூன்று ஆண்டுகள் பழைய அரிசி இருப்பு இருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கூறப் படுவதாவது: இந்திய உணவுக் கழகத்தின் தரவுகளின் படி, தற்போது 3.79 கோடி டன் அரிசியும், 2.13 கோடி டன் நெல்லும் அதன் கிடங்குகளில் உள்ளன. கடந்த 2022-23ல் 6.84 கோடி டன், 2023-24ல் 7.19 கோடி டன், 2024--25ம் நிதியாண்டில் 7.68 கோடி டன் அரிசியை மத்திய அரசு கொள்முதல் செய்தது. கிட்டத்தட்ட 20 கோடி டன் அரிசியில், 3.53 கோடி டன் அரிசி, பொது விநியோக திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டது. எனவே, இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான பழைய அரிசி 3 கோடி டன் வரை இருப்பது தெரிய வருகிறது. ஒரு டன் நெல்லுக்கு 23,000 ரூபாய் கொடுத்து அரசு கொள்முதல் செய்கிறது. அதை பதப்படுத்தி சேமித்து வைப்பது, வட்டி ஆகியவற்றை கணக்கிட்டால் ஒரு டன் அரிசிக்கான மொத்த செலவு 35,000 ரூபாயாக இருக்கும். வெளி மார்க்கெட்டில் ஒரு டன் அரிசியை 28,000 ரூபாய்க்கு அரசு விற்க முன்வந்தாலும், அதை வாங்க யாரும் முன்வராததால் கிடங்குகளில் தேங்கி கிடக்கிறது. இதனால், பழைய அரிசியை இந்தியா தங்களுக்கு ஏற்றுமதி செய்யக்கூடும் என்று வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இதனால், சில நாடுகள் கடந்த இரண்டு வாரங்களில், இந்திய அரிசிக்கான இறக்குமதி விலையை குறைத்து வருகின்றன. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.