உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமம்; ஆரோவில் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமம்; ஆரோவில் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சென்னை; மத்திய அரசின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 37 மாவட்டங்களில் 'மாதிரி சூரிய கிராமம்' உருவாக்கப்பட உள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து தரும் பணிக்காக, தமிழக மின் வாரியம் மற்றும், 'ஆரோவில்' ஆலோசனை நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. வீடுகளில் சூரியசக்தி மின் பயன்பாட்டை ஊக்குவிக்க, 'பி.எம். - சூர்ய கர் முப்தி பிஜிலி யோஜனா' திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பிரிவாக, நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி சூரிய கிராமம் உருவாக்கப்பட உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள வீடு, பொது பயன்பாட்டு கட்டடங்களுக்கு சூரியசக்தி மின்சாரம் வினியோகம் செய்யப்படும். மேலும், சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் தெரு விளக்கு, மோட்டார் பம்ப் அமைக்கப்படும். தமிழகத்தில் சென்னை தவிர்த்து, 37 மாவட்டங்களிலும் மாதிரி சூரிய கிராமம் உருவாக்கும் பணியில் மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் ஈடுபட்டுள்ளது. ஒரு கிராமத்திற்கு தலா, 1 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. எனவே, மாதிரி சூரிய கிராமத்திற்கு, சரியான கிராமத்தை தேர்வு செய்வது, எவ்வளவு திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை பணிக்காக மின் வாரியம் மற்றும், 'ஆரோவில்' ஆலோசனை நிறுவனத்துடன், நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி