| ADDED : பிப் 07, 2025 11:05 PM
புதுடில்லி:இன்போசிஸ் நிறுவனம், பணிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு மதிப்பீட்டு தேர்வில் தோல்வியடைந்த 400 பேரை, பணி நீக்கம் செய்வதில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்போசிஸ் நிறுவனம் மைசூர் அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு மதிப்பீட்டு தேர்வை நடத்தி வருகிறது. இதில் தொடர்ச்சியாக மூன்று முறை முயன்றும் வெற்றி பெறாதவர்கள் 400 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இவர்களில் பாதிப் பேர் கடந்த ஆண்டில் பணிக்கு சேர்ந்தவர்கள்.இதுகுறித்து இன்போசிஸ் தெரிவித்திருப்பதாவது: நாங்கள் பணியமர்த்தலுக்காக கடுமையான செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அந்த வகையில், புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு எங்களின் மைசூர் அலுவலகத்தில் விரிவான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதன்பின், அவர்களுக்கு உள்மதிப்பீட்டு தேர்ச்சி நடத்தப்படுகிறது. இதில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இத்தேர்வில் தோல்விஅடையும் பணியாளர்கள் தாங்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின்படி, பணியில் தொடர முடியாது. இந்நடைமுறை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர திறமையாளர்கள் கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். இவ்வாறு தெரிவித்து உள்ளது.