ரூ.2000 நோட்டுகள் 98 சதவீதம் திரும்பியது
பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில், 98 சதவீதம் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.கடந்த 2023, மே 19ம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாவது: அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி, பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில், 98.04 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்னும் 6,970 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 நோட்டுகள் மக்களிடம் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.