அணு சக்தி துறையில் தனியார் பங்களிப்பு சட்ட கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது
புதுடில்லி:நாட்டின் அணு சக்தி துறையில், தனியார் நிறுவனங்கள் அதிகளவில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக, மத்திய அரசு, சட்ட கட்டமைப்பை உருவாக்கி வருவதாக, அணுசக்தி ஆணைய தலைவர் அஜித் குமார் மொஹந்தி தெரிவித்துள்ளார். வியன்னாவில் நடைபெற்ற, சர்வதேச அணுசக்தி முகமையின் 69வது பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், வரும் 2047ம் ஆண்டுக்குள், அணுசக்தி திறனை 100 ஜிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்குடன், இந்தியா அணுசக்தி திட்டத்தை துவங்கியுள்ளதாக தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தற்போது, இந்தியா மொத்தம் 8,190 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 24 அணுமின் உலைகளை இயக்கி வருகிறது. வரும் 2032க்குள் இதை 22 ஜிகாவாட் ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2047க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி இலக்கை அடைய, சரியான கொள்கைகள், உள்நாட்டு அணுசக்தி தொழில்நுட்பங்களின் மேம் பாடு மற்றும் பயன்பாடு, பொது - தனியார் கூட்டு முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்து உள்கட்டமைப்பு முதலீடுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அணுசக்தி துறையில் தனியார் துறையின் பங்கேற்பை ஊக்குவிக்க, மத்திய அரசு சட்ட கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. ஸ்மால் மாட்யுலார் ரியாக்டர்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மத்திய அரசு இதுவரை 17,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.