புதுடில்லி; லஞ்சம் மற்றும் மோசடி வழக்கில், கவுதம் அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில், குழுமத்தின் நிதிநிலை குறித்து முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தும் முயற்சியில், அதானி குழுமம் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நேற்று, முதலீட்டாளர்களுக்கு குழுமத்தின் கடன் அளவு, திருப்பி செலுத்தும் திறன், எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அதானி குழும நிறுவனங்கள் அனைத்தும், குறைந்தபட்சம் அடுத்த 12 மாதங்களுக்கான கடனை திருப்பிச் செலுத்த போதுமான இருப்பை வைத்து உள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, கடந்த செப்டம்பர் இறுதி நிலவரப்படி, குழும நிறுவனங்களின் ரொக்க இருப்பு 53,024 கோடி ரூபாயாக இருந்தது. இது திருப்பி செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த கடன் தொகையில், 21 சதவீதமாகும். மேலும், இது அடுத்த 28 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டிய கடனுக்கு போதுமானது. குழுமத்தின் மொத்த முதலீடு, தற்போது 5.50 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும், குழுமம் 75,227 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அதே நேரத்தில் மொத்த கடன் 16,882 கோடி ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது.கடந்த ஓராண்டில், குழுமத்தின் ரொக்க லாபம் 58,908 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ந்து 30 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது, குழுமத்தின் லாபம் வளர்ச்சியடையவே இல்லை என்றாலும், தற்போதுள்ள செயல்பாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாயை கொண்டே, அடுத்த 10 ஆண்டுகளில் 5.90 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். குழுமத்துக்கு உள்ள மொத்த கடனில் 27 சதவீதம், பல்வேறு உலக வங்கிகளிடமிருந்து பெறப்பட்டது.உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் அளவு 94,400 கோடி ரூபாயாக உள்ளது. குழும நிறுவனங்களின் தர மதிப்பீடு அதிகரித்துள்ள காரணத்தால், கடனுக்கான வட்டி 8.20 சதவீதமாக குறைந்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்கான கடனை திருப்பிச் செலுத்த போதுமான இருப்பை குழும நிறுவனங்கள் வைத்துள்ளன தற்போதுள்ள செயல்பாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாயை கொண்டே, அடுத்த 10 ஆண்டுகளில் 5.90 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும் குழுமத்துக்கு உள்ள மொத்த கடனில் 27 சதவீதம், பல்வேறு உலக வங்கிகளிடமிருந்து பெறப்பட்டதாகும் உள்நாட்டு வங்கி களிடமிருந்து பெறப்பட்ட கடன் அளவு 94,400 கோடி ரூபாயாக உள்ளது.