டிஜிட்டல் மோசடி தடுப்புக்கு உதவுங்க வங்கிகள் - ஆர்.பி.ஐ.,க்கு ஏர்டெல் கடிதம்
புதுடில்லி:டிஜிட்டல் மோசடிகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வங்கிகள், தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம், ரிசர்வ் வங்கி உள்ளிட்டவைகளுக்கு ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். தொலைத்தொடர்பு சேவைகள் நிறுவனமான ஏர்டெல், 40க்கும் மேற்பட்ட வங்கிகள், ரிசர்வ் வங்கி மற்றும் என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் உள்ளிட்டவைகளுக்கு ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார். அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிகளை எதிர்த்து போராடவும், மோசடிகளை முன்கூட்டியே தடுப்பதற்கு தேவையான பல அடுக்கு பாதுகாப்பை உருவாக்குவதுடன், ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை மேற்கொள்ளும் வகையில், மோசடி நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என, கடிதத்தில் வலியுறுத்திஉள்ளது.ஏற்கனவே டிஜிட்டல் மோசடி உள்ளிட்ட நிதி மோசடிகளில் ஈடுபட்ட நிறுவனங்கள் குறித்த தகவல் களஞ்சியத்தை உருவாக்க, ரிசர்வ் வங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டியும், ஏர்டெல் மற்றும் என்.பி.சி.ஐ., இணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் கடிதம் அந்தந்த துறைகளுக்கு எழுதப்பட்டுஉள்ளது. மேலும், இது குறித்து வங்கிகளுக்கு எழுதியுள்ள கடிதத்திலும், ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை மேற்கொள்வதன் வாயிலாக, தீங்கிழைக்கும் வலைதளங்கள் மற்றும் மோசடியாளர்களின் அணுகலை தொடக்கப்புள்ளியிலேயே தடுப்பதன் வாயிலாக, பயனர்கள் தங்களை அறியாமலேயே இத்தகைய மோசடி தளங்களில் ஈடுபடுவதை தடுக்க உதவ முடியும் என்று தெரிவித்து உள்ளது. இதேபோன்று, தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் மோசடிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய ஒத்துழைப்பு குறித்து, சமீபத்தில் தனித்தனியே கடிதங்கள் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.