உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்க புதிய அரசின் முடிவுகளால் இந்தியாவுக்கு வாய்ப்புகள் வரக்கூடும் டிரம்ப் வெற்றி குறித்து அனந்த நாகேஸ்வரன் கருத்து

அமெரிக்க புதிய அரசின் முடிவுகளால் இந்தியாவுக்கு வாய்ப்புகள் வரக்கூடும் டிரம்ப் வெற்றி குறித்து அனந்த நாகேஸ்வரன் கருத்து

புதுடில்லி:அமெரிக்காவின் புதிய அரசு எடுக்கும் முடிவுகள், இந்தியாவுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கக்கூடும் என்று, தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகவும்; வர்த்தகத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் தெரிவித்துஇருந்தார்.

பதற்றம் தேவையில்லை

மேலும், மீண்டும் அதிபரானால், இதற்கு பதிலடியாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்து இந்திய வர்த்தகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.இதுகுறித்து, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனந்த நாகேஸ்வரன் தெரிவித்ததாவது:அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் ஏற்பட்டு ஏற்றுமதி பாதிக்கப்படுமோ என்று பதற்றமடையத் தேவையில்லை. உலக வளர்ச்சியை பொறுத்தே ஏற்றுமதி வர்த்தகத்தின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில், தற்போது உலக வளர்ச்சி நிச்சயமற்ற சூழலில் சிக்கித் தவித்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு அமெரிக்காவின் புதிய அரசு மேற்கொள்ளும் கொள்கை முடிவுகள், இந்தியாவுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கக் கூடும். எந்த சூழலையும் கையாள நாம் தயாராக இருக்க வேண்டும். ஆனால், முன்கூட்டியே இவ்வளவு அவநம்பிக்கை யுடன் இருப்பது அவசியமற்றது.அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதற்கும்; அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளிலிருந்து முதலீடுகளை திரும்பப் பெறுவதற்கும், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தான் காரணம் என்று கூறுவது சரியானதாக இருக்காது.

சாத்தியம்

ஏனென்றால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பிலிருந்தே இந்த நிலை தொடர்கிறது. உள்நாட்டு பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்த கவலைகள் வெறும் ஊகங்களே. பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்ததை போன்று நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் வளர்ச்சி, 6.50 முதல் 7 சதவீதமாக இருக்கும் என்றே நம்புகிறேன். அதே நேரத்தில் 7.20 சதவீதம் என்ற ரிசர்வ் வங்கியின் கணிப்பு சாத்தியமாகவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ