கார்களுக்கு பின்புற மோதல் சோதனை கட்டாயம்!
கார் விபத்துகளின்போது ஏற்படும் எரிபொருள் கசிவு, தீ விபத்து மற்றும் மின்சார பாதிப்புகளை குறைக்கும் வகையில், பின்புற மோதல் பாதுகாப்பு சோதனையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் தயாரிக்கப்படும் சம்பந்தப்பட்ட கார் மாடல்கள், 2029 ஏப்ரல் 1 முதல் திருத்தப்பட்ட 'ஏ.ஐ.எஸ்.-101' பாதுகாப்பு தரநிலையை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் கார்களில் மோதலின்போது எரிபொருள் கசிவை கட்டுப்படுத்தவும், மின்சார கார்களில் பேட்டரி மற்றும் உயர் மின்னழுத்த அமைப்புகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கேற்ப வாகனங்களின் பின்புற கட்டமைப்பு, எரிபொருள் தொட்டி, பேட்டரி பொருத்தும் அமைப்புகள் ஆகியவற்றில் தேவையான மாற்றங்களை கார் தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மோதல் சோதனையின் அம்சங்கள் பாதுகாப்பு தரநிலை: திருத்தப்பட்ட ஏ.ஐ.எஸ்.-101. எரிபொருள் கசிவு: பின்புற மோதல் சோதனைக்கு பிறகு, நிமிடத்துக்கு 30 கிராமுக்கு மிகக்கூடாது. மின்சார கார்கள்: பேட்டரி மற்றும் உயர் மின்னழுத்த அமைப்புகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். பொருந்தும் மாடல்கள்: புதிதாக அறிமுகமாகும் கார்களுடன், ஏற்கனவே உற்பத்தியில் உள்ள சம்பந்தப்பட்ட மாடல்களுக்கும் விதிகள் பொருந்தும்.