உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மாலை நேர மின் தேவையை சமாளிக்க பேட்டரி தொழில்நுட்பம் அவசியம்

மாலை நேர மின் தேவையை சமாளிக்க பேட்டரி தொழில்நுட்பம் அவசியம்

சென்னை:சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 'இன்பார்மா மார்க்கெட்ஸ்' சார்பில், 'ரினிவ்யூஎக்ஸ் 2025' என்ற பெயரில், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தொடர்பான கண்காட்சி நேற்று துவங்கியது. இது, நாளை வரை நடக்கிறது. இதில், புதுப்பிக்கத்தக்க மின் சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 150 நிறுவனங்கள், தயாரிப்புகள் அடங்கிய அரங்குகளை அமைத்துள்ளன. துவக்க விழாவில், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் சந்திரசேகரன் பேசியதாவது:காற்றாலை மின் நிலையம் அமைக்க, 'பேங்கிங்' சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால், தமிழகம் பசுமை மின்சாரத்தில், பல ஆண்டுகளாக முன்னணியில் உள்ளது. சூரியசக்தி மின் நிலையம் அமைக்க வழங்கப்படும் சலுகைகளால், தற்போது சூரியசக்தி மின் நிறுவு திறன் 10,000 மெகா வாட்டாக உள்ளது. மாலை நேரத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பேட்டரியில் மின்சாரத்தை சேமித்து, மீண்டும் பயன்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 'இன்பார்மா மார்க்கெட்ஸ்' நிர்வாக இயக்குநர் யோகேஷ் முத்ராஸ் கூறுகையில், ''இந்தியா புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் முக்கிய கட்டத்தில் உள்ளது. ''ஏற்கனவே, 1.25 லட்சம் மெகா வாட் புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், 2030க்குள் 5 லட்சம் மெகா வாட் நிறுவ இலக்கு நிர்ணயித்து உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை