உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  அகர்பத்தி தயாரிப்புக்கு புதிய விதிகள் வெளியிட்டது பி.ஐ.எஸ்.,

 அகர்பத்தி தயாரிப்புக்கு புதிய விதிகள் வெளியிட்டது பி.ஐ.எஸ்.,

புதுடில்லி: இந்திய தர நிர்ணய அமைப்பு எனும் பி.ஐ.எஸ்., அகர்பத்தி தயாரிப்புக்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. டில்லியில் வெள்ளியன்று நடைபெற்ற தேசிய நுகர்வோர் தின விழாவில், மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இதை வெளியிட்டார். இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகர்பத்திகளுக்காக ஐ.எஸ்., 19412:2025 என்ற தரக்குறியீடு அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, வீடுகள், அலுவலகங்களுக்குள் காற்றின் தரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சட்டப்படியான விதிமுறைகளை கடைப்பிடித்தல், உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரசாயனங்கள் மற்றும் நறுமண பொருட்களை மட்டும் பயன்படுத்துதல் ஆகியவை புதிய விதிகள். இவற்றை பின்பற்றி தயாரிக்கப்படும் அகர்பத்திகளில் பி.ஐ.எஸ்., முத்திரை இடம்பெற வேண்டும். புதிய விதிகளின்படி அகர்பத்திகள், 'கைகளால் தயாரிக்கப்பட்டவை' 'இயந்திரங்களால் தயாரிக்கப்பட்டவை' 'பாரம்பரிய அகர்பத்திகள்' என்று வகைப்படுத்தப்படும். அவற்றுக்கான பரிந்துரைக்கப்பட்ட மூலப்பொருட்கள், எரியும் தரம், நறுமண திறன், பயன்படுத்தப்பட்டுள்ள ரசாயன அளவு, நுகர்வோர் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை தொடர்பான விதிமுறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உலகில் அதிக அகர்பத்தி செய்யும் நாடாக உள்ள நம் நாட்டில், இத்துறையின் வர்த்தக மதிப்பு 8,000 கோடி ரூபாய் ஆகும். ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் அளவுக்கு அகர்பத்தியை 150 நாடுகளுக்கு மேல் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. கைவினைஞர்கள், குறுந்தொழில் முனைவோர், கிராமப்புற எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், மகளிர் ஆகியோருக்கு கணிசமான வேலைவாய்ப்பையும் தொழில் வாய்ப்பையும் அளிக்கும் துறையான அகர்பத்தி உற்பத்தி தொழில் இயங்கி வருகிறது. தடை செய்யப்பட்டவை அகர்பத்தி தயாரிப்பின்போது வாசனைக்காக பென்ஸைல் சயனைடு, எத்தில் அக்ரிலேட், டைபனலமைன் ஆகியவற்றையும், பூச்சிக்கொல்லி ரசாயனங்களான அலெத்ரின், பெர்மெத்ரின், சைபர்மெத்ரின், டெல்டா மெத்ரின், பிப்ரோனில் ஆகியவற்றையும் பயன்படுத்தக்கூடாது. இவை அனைத்தும் உலக அளவில் தடை செய்யப்பட்டவை. இவற்றை தவிர்க்குமாறு ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை