உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / விண்வெளி கருவிகள் உற்பத்தி மையம் ரூ.100 கோடி வழங்கும் மத்திய அரசு

விண்வெளி கருவிகள் உற்பத்தி மையம் ரூ.100 கோடி வழங்கும் மத்திய அரசு

சென்னை:தமிழகத்தில் விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, 'ஸ்பேஸ் மேனுபேக்சரிங் கிளஸ்டர்' எனப்படும் தொழிற் பூங்காவில், பொது கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசின், 'இன்ஸ்பேஸ்' நிறுவனம், 100 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளது. நாட்டில் விண்வெளி துறையில், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் போல், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுவதற்கு, 2020 ஜூனில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால், பல நிறுவனங்கள் ராக்கெட், செயற்கைக்கோள் உருவாக்கம், ராக்கெட் எரிபொருள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிறுவனங்களை ஊக்குவிப்பது, அனுமதி வழங்குவது போன்ற பணிகளை, 'இன்ஸ்பேஸ்' எனப்படும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் மேற்கொள்கிறது.இதுதவிர, விண்வெளி துறையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற் பூங்கா, தொழிற்நுட்ப மையங்கள் அமைப்பதையும் ஊக்குவிக்கிறது.அதன்படி, தமிழகத்தில், 'ஸ்பேஸ் மேனுபேக்சரிங் கிளஸ்டர்' எனப்படும் விண்வெளி துறைக்கான உற்பத்தி மையம் அமைக்க, அதில் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், பொது தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, 100 கோடி ரூபாய் வழங்க இன்ஸ்பேஸ் முன்வந்துள்ளது.இதற்கு, தமிழக அரசு குறைந்தது, 40 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும். அங்கு, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இதனால் தமிழகத்தில், வேலைவாய்ப்புகள் அதிகஅளவில் உருவாகும்.

குலசேகரன்பட்டினத்தில்தாமதிக்கும் தமிழக அரசு

துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில், இஸ்ரோ சிறிய வகை ராக்கெட்களை ஏவும், ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது. அதன் அருகில், விண்வெளி தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியானது. விண்வெளி பூங்காவில் ராக்கெட் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும், உந்துசக்தி பூங்காவில் ராக்கெட்டிற்கான எரிபொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மனைகள் வழங்க திட்டமிடப்பட்டது. இஸ்ரோ ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணியை துவக்கிவிட்டது. ஆனால், விண்வெளி மற்றும் உந்துசக்தி பூங்காவுக்கு ஏற்கனவே நிலம் அடையாளம் காணப் பட்ட நிலையில், கையகப்படுத்தும் பணிகூட துவங்கப்படாததால், பூங்கா அமைக்கும் பணிகள் தாமதமாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை