சென்னை பெட்ரோலிய நிறுவனம் பெட்ரோல், டீசல் விற்க அனுமதி
சென்னை : நேரடியாக பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையில் ஈடுபடுவதற்கு, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த 1965ம் ஆண்டு முதல் சென்னையை தலைமையிடமாக கொண்டு, சி.பி.சி.எல்., எனப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனத்துக்கு, எண்ணுாரில் 1.05 கோடி டன் உற்பத்தி திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2002ம் ஆண்டு முதல் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரும் சி.பி.சி.எல்., எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனமாக மாற உள்ளது.தற்போது இந்நிறுவனத்தின் பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி., உள்ளிட்ட தயாரிப்புகள், அதன் தாய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான எம்.ஆர்.பி.எல்., எனும் மங்களூரு ரீபைனரி அண்டு பெட்ரோகெமிக்கல் சில்லரை விற்பனையில் இறங்கிய பின், சி.பி.சி.எல்., மட்டும் சுத்திகரிப்பு நிறுவனமாக தொடர்ந்து வந்தது.