சீன போன் நிறுவனங்கள் இந்தியாவில் விரிவாக்கம்
புதுடில்லி: இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், குறைந்த லாபம் கிடைத்தாலும், இந்திய சந்தையில் தொடர்ந்து தங்கள் இருப்பை வலுப்படுத்த, சீனா ஸ்மார்ட்போன் ஒப்பந்த தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்தியா - சீனா இடையேயான உறவில் இணக்கம் ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் விரிவாக்க நடவடிக்கையை தொடர, சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் ஒப்பந்த தயாரிப்பாளர்களான டி.பி.ஜி., பி.ஒய்.டி., ஆகியவை முடிவு செய்துள்ளன. டி.பி.ஜி., நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, ஜூன் காலாண்டில் 13 சதவீதத்தில் இருந்து, செப்டம்பர் காலாண்டில் 21 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதே போல், பி.ஒய்.டி.,யின் பங்களிப்பு, நிலையாக 7 சதவீதமாக உள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர் அதிகரித்து வருவதால், டிக்சன் போன்ற நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. எனினும், இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், அரசின் ஆதரவு, காரணமாக இத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.