உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொழிலை விரைவாக துவக்காவிட்டால் மானியம் திரும்ப வசூலிக்கப்படும் நிறுவனங்களுக்கு சிட்கோ எச்சரிக்கை

தொழிலை விரைவாக துவக்காவிட்டால் மானியம் திரும்ப வசூலிக்கப்படும் நிறுவனங்களுக்கு சிட்கோ எச்சரிக்கை

சென்னை, மே 30-நகரமயமாக்கலால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணைந்து, தனியார் தொழிற்பேட்டை அமைக்க, 'சிட்கோ' நிதியுதவி செய்கிறது. இத்திட்டத்தில் தவறுகளை தடுக்கும் வகையில், விரைந்து தொழில் துவங்குமாறு, மானிய உதவி பெற்றுள்ள நிறுவனங்களை அரசு எச்சரித்துள்ளது.சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உதிரிபாகங்கள் உற்பத்தி உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் நகரமயமாக்கல் காரணமாக, தொழிலை நடத்த முடியாமல் சிரமப்படுகின்றன. எனவே, நகரங்களில் அமைந்துள்ள தொழிற்கூடங்களை நகருக்கு வெளியே மாற்றி அமைக்க, தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிதியுதவி செய்கிறது. இதற்கு குறைந்தது, 20 நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து விண்ணப்பிக்க வேண்டும்.இதுதவிர, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன சங்கங்கள் புதிய தனியார் தொழிற்பேட்டை அமைக்க முன்வரும்பட்சத்தில், திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 15 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், வெள்ளாள கவுண்டம்பட்டியில், கனரக வாகனங்களுக்கு, 'பாடிபில்டிங்' கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், 52 ஏக்கரில் தனியார் தொழிற்பேட்டை அமைக்க, 2013ல் அரசு ஒப்புதல் அளித்தது. திட்ட செலவு, 13.68 கோடி ரூபாய். இதில், 12.68 கோடி ரூபாயை மானியமாக அரசு வழங்கியுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொழிற்பேட்டை அமைக்கும் பணி, 2018ல் முடிவடைந்தது. அங்கு, ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் நிறுவனங்கள் தொழிலை துவக்காமல் உள்ளன. இதனால், தொழிற்பேட்டை கட்டமைப்புகள் சேதமடைந்து வருகின்றன. இதை தடுக்க, அடுத்த இரு மாதங்களுக்குள் தொழிலை துவக்கவில்லை எனில், மானியமாக வழங்கிய நிதி திரும்ப வசூலிக்கப்படும் என, நிறுவனங்களை அரசு எச்சரித்துள்ளது.நாமக்கல் மாவட்டம், வெள்ளாள கவுண்டம்பட்டியில் தனியார் தொழிற்பேட்டை அமைக்க 12.68 கோடி ரூபாயை மானியமாக அரசு வழங்கியுள்ளது. ஆனால், ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் நிறுவனங்கள் தொழில் துவங்காமல் உள்ளன

பணி முடிக்க உத்தரவு

மதுரையில், சிறு தொழில்களை உள்ளடக்கிய மதுரை பொறியியல் குழுமம், அம்மாவட்டத்தில் கச்சிராயன்பட்டி, மேலவளவில், 54 ஏக்கரில் தனியார் தொழிற்பேட்டை அமைக்க உள்ளது. திட்ட மதிப்பீடு, 13.64 கோடி ரூபாய். இதில் அரசு பங்கான 6.82 கோடி ரூபாயில், 1.75 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், நிலத்தை மேம்படுத்துவதில் 25 சதவீத பணி மட்டுமே முடிவடைந்துள்ளன. இந்த பணிகளையும் விரைவாக முடிக்குமாறு அரசு எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி