உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  கார்பன் சான்றிதழ் செலவு திருப்பி வழங்க பரிசீலனை

 கார்பன் சான்றிதழ் செலவு திருப்பி வழங்க பரிசீலனை

புதுடில்லி: ஐரோப்பிய யூனியனின் கார்பன் வரி விதிகளை பின்பற்றுவதற்காக ஏற்படும் சான்றிதழ் மற்றும் சரிபார்ப்பு செலவில், 90 சதவீதம் வரை குறு மற்றும் சிறு ஸ்டீல் ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பி வழங்க, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து கூறப் பட்டதாவது: ஐரோப்பாவுக்கு ஸ்டீல் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், அந்த பொருளை தயாரிக்கும் போது எவ்வளவு கார்பன் வெளியேற்றப்பட்டது என்பதை கணக்கிட்டு, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் சரிபார்ப்பு சான்றிதழ் பெற வேண்டும். இந்த ஆய்வு மற்றும் சான்றிதழுக்கு, ஒரு நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகலாம். பெரிய நிறுவனங்கள் இந்த செலவை சமாளிக்க முடிந்தாலும், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு இது அதிக சுமையாக உள்ளது. இதனால், இந்த செலவில் 90 சதவீதம் வரை திருப்பி வழங்கும் திட்டத்தை அரசு ஆலோசித்தது. அதன் பின், இதற்கான பரிந்துரை வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. உரிய ஒப்புதல் கிடைத்த பின், தகுதியான ஏற்றுமதியாளர்கள் இந்த உதவியை பெற முடியும்.

கார்பன் வரி

ஒரு பொருளின் தயாரிப்பில் அதிக கார்பன் வெளியேற்றப் பட்டால், அப்பொருள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் செல்லும் போது, கார்பன் அளவுக்கு ஏற்ப கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !