உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வரி தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த ஏற்றுமதியாளர்களிடம் தரவுகள் சேகரிப்பு

வரி தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த ஏற்றுமதியாளர்களிடம் தரவுகள் சேகரிப்பு

திருப்பூர்; மத்திய, மாநில அரசு வரி மற்றும் தீர்வைகளுக்கான தள்ளுபடி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஏதுவாக, ஏற்றுமதியாளர்களிடம் தரவுகள் சேகரிக்கும் பணியை, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., முடுக்கிவிட்டுள்ளது.ஆயத்த ஆடை, பின்னலாடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் உற்பத்தியின் போது செலுத்தப்படும் வரிகளை, உள்நாட்டு விற்பனையின்போது, உள்ளீட்டு வரியாக திரும்ப பெற வாய்ப்புள்ளது.ஏற்றுமதியின் போது, உற்பத்தியின் போது செலுத்திய சிலவகை வரிகளைப் பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது.குறிப்பாக, பெட்ரோல், டீசல், மின்சாரம், போக்குவரத்து செலவுக்காக செலுத்தப்படும் வரியினங்களை, ஏற்றுமதியாளர்கள் திரும்ப பெற முடியாது. போட்டியை சமாளித்து, ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்த ஏதுவாக, மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்திய வரி மற்றும் தீர்வைகளுக்கான தள்ளுபடி திட்டம், 2019 முதல் அமலில் இருந்தது; கடந்த மார்ச் 26ம் தேதியுடன் காலாவதியானது.ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, மத்திய அரசு, கமிட்டி அமைத்துள்ளது. கமிட்டி உத்தரவுப்படி, ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் குழு, 'கிளஸ்டர்' வாரியாக, ஏற்றுமதியாளர்களை சந்தித்து, தரவுகளை விரைந்து சமர்ப்பிக்க வலியுறுத்தி வருகிறது.ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறுகையில், 'மத்திய, மாநில அரசு வரி மற்றும் தீர்வைகளை தள்ளுபடி பெறும் திட்டத்தை, உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்புதல் பெற்று தான், மீண்டும் செயல்படுத்த முடியும். அதற்காக, துல்லியமான புள்ளிவிபரங்களுடன் தரவுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.'ஒவ்வொரு நிறுவனமும், திரும்பப்பெற முடியாத, ஏற்றுமதிக்கான உற்பத்தி செலவின வரி தொடர்பான விபரங்களை சமர்ப்பித்து வருகின்றன. 'பல்வேறு சவால்கள் எழுந்துள்ளதால், இது போன்ற தள்ளுபடி சலுகை மட்டுமே தொழிலை வெற்றிகரமாக நடத்த பக்கபலமாக இருக்கும்' என்றனர்.

சுருக்கம்

போட்டியை சமாளித்து, ஏற்றுமதியை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்திய வரி மற்றும் தீர்வைகளுக்கான தள்ளுபடி வழங்கும் திட்டம் அறிமுகமானது * 2019ல் அமலான வரி தள்ளுபடி திட்டம், கடந்த மார்ச் 26ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது* தள்ளுபடி பெறும் திட்டத்தை உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்புதல் பெற்றே, மீண்டும் செயல்படுத்த முடியும் * இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, மத்திய அரசு, கமிட்டி அமைத்துள்ளது * ஏற்றுமதியாளர்களிடம் தரவுகள் சேகரிக்கும் முயற்சி துவங்கியுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி