உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வேலுாரில் நீரேற்று மின் நிலையம் அதானிக்கு ஒப்புதல் அளிக்க முடிவு

வேலுாரில் நீரேற்று மின் நிலையம் அதானிக்கு ஒப்புதல் அளிக்க முடிவு

சென்னை:வேலுார் மாவட்டம் அல்லேரியில், 1,800 மெகா வாட் திறனில், நீரேற்று மின் நிலையம் அமைக்க அதானி நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது. அதேசமயம், திண்டுக்கல்லில் இந்நிறுவனம் விருப்பம் தெரிவித்த திட்டத்திற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டு உள்ளது. நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் உள்ள நிறுவனங்களுக்கு, மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம், இந்தாண்டு துவக்கத்தில் அழைப்பு விடுத்தது. இதில், வேலுாரிலும், திண்டுக்கல்லிலும் நீரேற்று மின் திட்டங்களை செயல்படுத்த, அதானி விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:அதானி நிறுவனம், வேலுார் மாவட்டம், அல்லேரியில், 1,800 மெகா வாட் திறனிலும்; திண்டுக்கல் மாவட்டம், ஆழியாறு - பாலமலை என்ற இடத்தில், 1,200 மெகா வாட் திறனிலும் நீரேற்று மின் திட்டங்களை செயல்படுத்த விருப்பம் தெரிவித்தது. விதிப்படி, நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்தும் போது, ஆறுகளை மாசுபடுத்தக் கூடாது. எனவே, அந்த மின் திட்டம் அமைய உள்ள இடத்திற்கு அருகில் ஆறுகள் இருக்கக் கூடாது. அதானி நிறுவனம், திண்டுக்கல்லில் நீரேற்று மின் திட்டம் அமைக்க கோரிய இடத்திற்கு அருகில், பொதுப்பணி துறைக்கு அணை உள்ளது. எனவே, அங்கு மின் நிலையம் அமைப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. வேலுார் அல்லேரியில் மின் நிலையம் அமைப்பதில் பிரச்னை இல்லை. இருப்பினும், அத்திட்டத்தில் அதானி நிறுவனத்தின் பங்கு, பசுமை எரிசக்தி கழகத்தின் பங்கு என்ன என்பது இறுதி செய்யப்பட்டதும், ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் திட்டத்தை துவக்கி, ஏழு ஆண்டுகளில் முடிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

அப்பர் பவானி திட்டம்

நீலகிரி மாவட்டத்தில், தலா, 250 மெகா வாட் திறனில், நான்கு அலகுகள் உடைய, அப்பர் பவானி நீரேற்று மின் திட்டத்தை, மத்திய அரசின் தேசிய அனல் மின் கழகம், தமிழக மின் வாரியத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. திட்ட செலவு, 5,005 கோடி ரூபாய். மின் திட்ட பணிகளை துவக்க, சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, சுற்றுச்சூழல் துறையிடம், தேசிய அனல் மின் கழகம் விண்ணப்பித்திருந்தது. விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

நீரேற்று மின் திட்டம்

நீரேற்று மின் திட்டத்தில் மேல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, டர்பைன் சுழற்சியால் மின் உற்பத்தி செய்யப்படும். பின், தண்ணீர் கீழ் அணைக்கு வரும். மின் உற்பத்தி தேவைப்படாத சூழலில் இந்த தண்ணீர், அதிக திறன் உடைய மோட்டார் பம்ப் வாயிலாக, மேல் அணைக்கு எடுத்துச் செல்லப்படும். இதன் வாயிலாக, ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை, மீண்டும் மீண்டும் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !