ஓராண்டாக அதிகரிக்காத டீசல் தேவை
புதுடில்லி:கடந்த ஓராண்டில், டீசலின் தேவை ஒரே அளவில் நீடிப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்திருப்பதைக் காட்டுவதாக கருதப்படுகிறது.கடந்த ஆண்டு அக்டோபரில் லாரிகள், வேளாண் இயந்திரங்களுக்கு மொத்தம் 76.40 லட்சம் டன் டீசல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் அக்டோபரிலும் அதே அளவிலேயே பயன்பாடு நீடித்ததாக, பெட்ரோலிய அமைச்சகத்தின் முதல்கட்ட புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. உலகின் மிக அதிக எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியாவில், இறக்குமதியாகும் 10 பேரல்களில் 4 பேரல்கள் டீசல் ஆகும். நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் பொருட்களின் நுகர்வு எதிர்பார்த்த அளவில் அதிகரிக்கவில்லை என்பதால், சரக்குப் போக்குவரத்துக்கான டீசல் தேவையும் அதிகரிக்கவில்லை என, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.மேலும், இந்த ஆண்டில் பருவமழை காலம் கடந்தும் பெய்ததால், வேளாண் தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்தி, டீசல் தேவையில் அது பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.