ஐரோப்பிய நாடுகளுக்கு டீசல் ஏற்றுமதி 137 சதவிகிதம் உயர்வு
புதுடில்லி:ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவின் டீசல் ஏற்றுமதி, கடந்த ஆகஸ்டில் 137 சதவீதம் அதிகரித்துள்ளது. டீசல் ஏற்றுமதி, கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில். ஆகஸ்டில் 73 சதவீதம் அதிகரித்ததாக, தரவு வழங்கும் நிறுவனமான கெப்ளர் தெரிவித்துள்ளது. ஆண்டு அடிப்படையில், டீசல் ஏற்றுமதி, 2024 ஆகஸ்ட் மாதத்தைவிட, கடந்த ஆகஸ்டில் 137 சதவீதம் அதிகரித்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு, தினசரி 2.28 லட்சம் பேரல் டீசலை இந்தியா ஏற்றுமதி செய்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தைவிட இது 36 சதவீதம் அதிகம். இந்தியாவில் இருந்து டீசலை வாங்க ஐரோப்பிய நாடுகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. எனவே, ஏற்றுமதி இந்த ஆண்டின் எஞ்சியுள்ள மாதங்களிலும் அதிக அளவில் நீடிக்க வாய்ப்புள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்குவதன் வாயிலாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாக அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டினர். அதன் விளைவாக, இந்திய பொருட்களுக்கு அமெரிக்க வரியை 50 சதவீதமாக அதிகரித்தனர். அதன் பிறகும், ஐரோப்பிய நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி சீராக அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.