உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டாடா சன்ஸ் நிறுவன இயக்குனர் நியமனத்தில் கருத்து வேறுபாடு

டாடா சன்ஸ் நிறுவன இயக்குனர் நியமனத்தில் கருத்து வேறுபாடு

மும்பை:மும்பையில் நடைபெற்ற டாடா டிரஸ்ட் கூட்டத்தில், டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குநர் நியமனம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் எழுந்தன. தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பின், கடந்தாண்டு அக்டோபரில் டாடா டிரஸ்ட் தலைவராக, அவரது சகோதரர், நோயல் டாடா பொறுப்பேற்றார். 75 வயதை தாண்டிய டாடா டிரஸ்ட் நியமன இயக்குநர்கள் மறுநியமனம் தொடர்பாக, ஒவ்வொரு ஆண்டும் முடிவு செய்யப்பட வேண்டும் என, புதிய தீர்மானத்தை டாடா டிரஸ்ட் நிறைவேற்றியது. இதன்படி, தற்போது 77 வயதாகும் விஜய் சிங், டாடா டிரஸ்டின் சார்பாக, மீண்டும் டாடா சன்ஸ் குழுமத்தின் நியமன இயக்குநராக தொடர வேண்டுமா என்பது குறித்து, நேற்ற நடந்த கூட்டத்தில் விவாதம் நடந்தது. இதில், விஜய் சிங்கை மீண்டும் நியமிப்பதற்கு, நான்கு அறங்காவலர்களான மெஹ்லி மிஸ்திரி, பிரமித் ஜாவேரி, ஜஹாங்கீர் மற்றும் டேரியஸ் காம்பட்டா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து விஜய் சிங் விலகினார். இருப்பினும், அவர் தொடர்ந்து, டாடா டிரஸ்டின் அறங்காவலராக நீடிப்பார். பின், மெஹ்லி மிஸ்திரியை, டாடா டிரஸ்ட் சார்பில் டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குநராக நியமிக்க, நான்கு அறங்காவலர்களும் முயற்சி செய்தனர். ஆனால், டாடா டிரஸ்டின் தலைவர் நோயல் டாடா மற்றும் அறங்காவலர் வேணு சீனிவாசன் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எந்தவொரு நியமனமும் டாடா குழுமத்தின் பாரம்பரிய மதிப்புகளுக்கும், சரியான நடைமுறைகளுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். கிட்டத்தட்ட 27 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் சந்தை மதிப்பு கொண்ட டாடா சன்ஸ் குழுமத்தின் எதிர்கால செயல்பாடுகளை, டிரஸ்டிகள் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என விவாதம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பிரச்னைகள் தகவல் பரிமாற்றம்: டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இல்லாத அறங்காவலர்கள், டாடா டிரஸ்டின் சார்பில் உள்ள இயக்குநர்களிடம் போதுமான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில்லை என்ற புகார் உள்ளது. ஊதியம் : டாடா டிரஸ்டின் சார்பாக நியமிக்கப்பட்ட இயக்குநர்கள், டாடா சன்ஸ் இடமிருந்து ஊதியம் பெறுவது தவறு என்றும், அவர்கள் அறக்கட்டளைகளின் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் அறங்காவலர்கள் சிலர் வாதிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R K Raman
செப் 16, 2025 23:01

இது தனிப்பட்டது. பப்ளிக் சாரிடபள் டிரஸ்ட் இல்லை... குடும்ப சொத்துக்கள் பராமரிப்பிற்கு இது போன்ற அமைப்பு உள்ளது... 200க்குக் கூவக்கூடாது


Tamilan
செப் 13, 2025 23:42

டிரஸ்ட் என்பது கோடிக்கணக்கான கோடிகள் கொள்ளைகளை 100 கோடி மக்களுக்கு எலும்புத்துண்டு கொடுத்து மறைக்க கருப்புப்பணத்தை பதுக்க ஏற்படுத்தப்பட்டது . குழுமம் என்பது கோடிக்கணக்கான கோடிகள் 100 கோடி மக்களிடம் அடித்த கொள்ளைகளை அரசுக்கு அதிகாரிகளுக்கு எலும்புத்துண்டு போட்டு மறைப்பது. இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது


முக்கிய வீடியோ