ஸ்பைஸ்ஜெட் பங்கு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் கலாநிதி மனு
புதுடில்லி:ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் 1,323 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, கலாநிதி மாறன் மற்றும் கல் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 2015ல் ஸ்பைஸ்ஜெட்டில் இருந்த பங்குகளை, அதன் உரிமையாளர் அஜய் சிங்குக்கு கலாநிதி மாறன், கல் ஏர்வேஸ் மாற்றினர். நிதி நெருக்கடியில் இருந்த விமான நிறுவனத்துக்கு மாற்றத்தக்க வாரன்ட், முன்னுரிமை பங்குகளாக 679 கோடி ரூபாய் செலுத்தினர்.அஜய் சிங்கின் நிர்வாகத்தில், மாற்றத்தக்க வாரன்ட் வெளியிடப்படாததால், 1,323 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, மாறன் தரப்பினர் முறையிட்டனர். ஆனால், வட்டியுடன் 679 கோடி ரூபாயை திருப்பி அளிக்க, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற மூன்று நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் கலாநிதி மாறன், கல் ஏர்வேஸ் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.