கோவை, மதுரையில் ஆராய்ச்சி பூங்கா தொழில் துறை பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி
சென்னை:தொழில் துறையினர் சந்திக்கும் சவால், பிரச்னைகளுக்கு ஆராய்ச்சி வாயிலாக தீர்வு காண, 'டிட்கோ' நிறுவனம் முடிவு செய்துஉள்ளது. தமிழகத்தில் ஆராய்ச்சி வாயிலாக புதிய கண்டுபிடிப்பு, தொழில் துறையினர் சந்திக்கும் பிரச்னை, சவால்களுக்கு நிரந்தர தீர்வு காண்பது ஆகியவற்றை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கல்வி துறை, தொழில் துறை, அரசை ஒருங்கிணைத்து பல்கலை ஆராய்ச்சி பூங்கா அமைக்கும் பணியில், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதலாவது ஆராய்ச்சி பூங்கா, கோவை டைடல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பூங்காவை மதுரை காமராஜர் பல்கலை வளாகத்தில் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது.
எந்த துறைகள்
கோவையில் பாரதியார் பல்கலை மற்றும் பி.எஸ்.ஜி., டெக் உடன் இணைந்து, தொழில்நுட்ப ஜவுளி, மின்வாகனம், மோட்டார்ஸ், பம்ப்ஸ், வேளாண் தொழில்நுட்பம், உணவு, ஆரோக்கிய பராமரிப்பு, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பம், ஐ.டி., 'டீப் டெக், நானோ அண்டு சஸ்டெயினபல் எனர்ஜி' துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கருத்துரு அனுப்பலாம்.மதுரையில் ரப்பர், வேளாண் உணவு பதப்படுத்துதல், ஐ.டி., டீப்டெக், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, ஜவுளி துறைகளில் ஆய்வு செய்யலாம்.