முட்டை உற்பத்தியாளர்களுக்கு ரூ.300 கோடி நஷ்டம்
நாமக்கல் : உற்பத்தி செலவை விட, விலையை குறைத்து நிர்ணயம் செய்வதாலும், 'நெக்' விலையில் இருந்து குறைத்து வியாபாரிகள் கொள்முதல் செய்வதாலும், முட்டை உற்பத்தியாளர்களுக்கு, கடந்த மூன்று மாதங்களில், 300 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.நாமக்கல் மண்டலத்தில் தினசரி, 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவான நெக், முட்டைக்கு கொள்முதல் விலையை அறிவித்து வருகிறது. பண்ணையாளர்களின் நஷ்டம் குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:ஒரு முட்டை உற்பத்தி செய்ய, 500 காசு செலவாகிறது. ஆனால், கொள்முதல் விலை, உற்பத்தி செலவை காட்டிலும் மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, 'நெக்' விலை, 390 காசு. இதிலும், 50 காசு வரை குறைத்தே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் ஒரு நாளைக்கு, 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த ஜன., முதல் இதுவரை தோராயமாக, 300 கோடி ரூபாய் அளவுக்கு, பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை தவிர்க்க, உற்பத்தி செலவில் இருந்து, கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.