சூலுார்: 'நெட் மீட்டர் வசதியுடன் சோலார் பேனல் அமைக்க, மாநில அரசு மானியம் வழங்க வேண்டும்' என, விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில், விசைத்தறி பிரதான தொழில். 10 ஆண்டுகளாக மின் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழில் வீழ்ச்சியடைந்து உள்ளது. சலுகை வழங்கினாலும், மின் கட்டணத்தை சமாளிக்க முடியாமல் விசைத்தறியாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். சூரிய ஒளி மின்சாரம் ஒன்றுதான் தீர்வு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பூபதி கூறியதாவது: சாதா விசைத்தறிகள் வைத்திருப்போர் மின் கட்டண உயர்வை சமாளிக்க முடியவில்லை. சூரிய ஒளி மின்சாரம் தான் எங்களுக்கு ஒரே தீர்வு. வீடுகளுக்கு வழங்குவது போல், நெட் மீட்டர் வசதியுடன் சோலார் பேனல் அமைக்க, தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். அதேபோல் மத்திய அரசும் மானியம் வழங்க வேண்டும். சாதா விசைத்தறிகளை நாடா இல்லாத விசைத்தறியாக நவீனப்படுத்த, மாநில அரசு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஒரு தறிக்கு, 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. அதில், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியும் கட்ட வேண்டிய நிலை உள்ளது. அதனால், ஜி.எஸ்.டி., வரித்தொகையையும் மாநில அரசே ஏற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அப்போதுதான், விசைத்தறியாளர்களுக்கு பலன் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நெட் மீட்டர் கணக்கிடுவது எப்படி?
* நெட் மீட்டர் என்பது சூரிய ஒளி மின் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் பிரத்யேக இருவழி மின்சார மீட்டர். இது சோலார் பேனல் உற்பத்தி செய்யும் மின்சாரம் மற்றும் மின்சார கட்டமைப்பான கிரிட் வாயிலாக பயன்படுத்தும் மின்சாரம் என இரண்டையும் கணக்கிடுகிறது. * உபரி மின்சாரத்தை மீண்டும் கிரிட்டுக்கு அனுப்பும்போது அதற்கான கடன் மதிப்பான கிரெடிட் வழங்கப்படுகிறது. இதனால், நுகர்வு மின் கட்டணம் குறைய வாய்ப்பு ஏற்படும் * சூரிய ஒளி மின்சாரம் பகல் நேரங்களில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது நுகர்வோர் பயன்படுத்தும் அளவைவிட அதிகமாக இருந்தால், அந்த கூடுதல் மின்சாரம் கிரிட்டுக்கு அனுப்பப்படும். * மொத்த மின்நுகர்வில் இந்த கிரெடிட் கழிக்கப்பட்டு, பயன்படுத்திய நிகர மின்சாரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.