ஆன்லைன் கேமிங் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
பெங்களூரு: பணமோசடி புகாரில், ஆன்லைன் கேமிங் நிறுவனங்களான 'வின்ஸோ, கேம்ஸ்கிராப்ட்' ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, கடந்த ஆகஸ்டில், மத்திய அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இந்நிலையில், இந்நிறுவனங்கள் பயனர்களுக்கு பாதகமாக, கேமிங் விதிமுறைகளில் முறைகேடாக மாற்றம் செய்தது, கிரிப்டோவாலட்டை பயன்படுத்தி, கிரிப்டோகரன்சி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்டோர் தரப்பில் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நிலையில், டில்லி, குருகிராம், பெங்களூரு ஆகிய நகரங்களில், உள்ள வின்ஸோ, கேம்ஸ்கிராப்ட் நிறுவனத்தின் அலுவலகங்கள், உயர் அதிகாரிகள் வீடுகள் உட்பட 11 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். நிறுவனங்கள் பின்னணி ஆன்லைனில் 'ரம்மி கல்ச்சர்' உட்பட பல்வேறு விளையாட்டு தளங்களை நடத்தி வரும் கேம்ஸ்கிராப்ட், கடந்த 5 ஆண்டுகளில், தன் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி ரமேஷ் பிரபு, 270 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக சமீபத்தில் பெங்களூரு போலீசில் புகார் அளித்திருந்தது. இந்தியாவில் 15 மொழிகளில், 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கும் வின்ஸோ, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் இயங்கி வருகிறது.