உலக சந்தையில் இந்திய மஞ்சள் நிராகரிப்பு பயிரிடுவதில் பின்வாங்கும் விவசாயிகள்
புதுடில்லி:மஞ்சள் சாகுபடியை பாதுகாக்க, மத்திய அரசு அண்மையில் தேசிய மஞ்சள் வாரியத்தை அமைத்துள்ள நிலையில், மஞ்சள் பயிரிடும் விவசாயிகள் குறைந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலக அளவில் மஞ்சள் வர்த்தகத்தில் இந்தியா 62 சதவீத பங்கு வகிக்கிறது. மஞ்சள் விவசாயத்தை அதிகரித்து, விவசாயிகளுக்கு வணிக வாய்ப்புகளை வழங்க, தேசிய மஞ்சள் வாரியம், கடந்த 14ம் தேதி தெலுங்கானாவின் நிசாமாபாத் நகரில் துவங்கப்பட்டது. இதன் வாயிலாக, மஞ்சளின் தரத்தை உறுதி செய்தல், பரிசோதனை மற்றும் சான்றளிப்பை முறைப்படுத்துதல் ஆகியவற்றை வாரியம் மேற்கொள்ள உள்ளது.இந்நிலையில், ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர்., வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:மஞ்சளை இறக்குமதி செய்யும் நாடுகள், அண்மைக் காலமாக இந்திய மஞ்சளை நிராகரிப்பது அதிகரித்துள்ளது. விலையில் அதிக ஏற்றத்தாழ்வுகள், குறைந்து வரும் சாகுபடி பரப்பு ஆகியவையும், மஞ்சள் வர்த்தகத்தில் இந்தியாவின் முன் உள்ள சவால்களாக உள்ளன. குறித்த காலத்தில் அரசு தலையிட்டு, மஞ்சள் உற்பத்தியை நிலைப்படுத்தவும்; விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து ஊக்குவிக்கவும் அவசியம் உள்ளது. உலக மஞ்சள் சந்தையில், பெரும்பான்மையான பங்கை இந்தியா வைத்துள்ள போதிலும், பல்வேறு காரணங்களால், மஞ்சள் பயிரிடுவதில் இருந்து விவசாயிகள் விலகி வருவது, எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.மஞ்சளை இறக்குமதி செய்யும் நாடுகள் எதிர்பார்க்கும் தரத்தில் அதை உற்பத்தி செய்ய இயலாததால், விவசாயிகள் பலரும் பின்வாங்குகின்றனர். குறிப்பாக, திடீர் விலை வீழ்ச்சி, சாதகமற்ற வானிலை, பூச்சி தாக்குதல், சரியான கொள்முதல் நிறுவனங்களை அடையாளம் காண இயலாமை, தரமான சாகுபடி அளிக்க இயலாத அளவு மண்வளம் சரிவு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக மஞ்சள் உற்பத்தி குறைந்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.*சர்வதேச சந்தையில் இந்திய மஞ்சள் வர்த்தகம் 62%*தேசிய மஞ்சள் வாரியம் கடந்த 14ம் தேதி துவங்கப்பட்டது*உலக நாடுகள் எதிர்பார்க்கும் தரத்தில் உற்பத்தி இல்லை*தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சரியும் உற்பத்தி
விவசாயிகளுக்கான சவால்கள்
திடீர் விலை வீழ்ச்சிசாதகமற்ற வானிலைபூச்சி தாக்குதல்நல்ல கொள்முதல் நிறுவனங்கள்மண்வளம் சரிவு