சீன மருந்து குவிப்பை தடுக்க அரசு நடவடிக்கை: குறைந்தபட்ச இறக்குமதி விலை நிர்ணயித்தது
புதுடில்லி: மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு, குறைந்தபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. சீனாவின் விலை குறைப்பு மற்றும் சீன மருந்துகள் இங்கு குவிவதை தடுப்பது ஆகியவற்றை கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குநர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு, கிளாவுலானிக் அமிலம், பொட்டாஷியம் கிளாவுலனேட் மற்றும் இதை தயாரிக்க பயன்படும் இடைநிலைப் பொருட்கள் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயித்துள்ளது. பாக்டீரியாக்களால் உருவாகும் தொற்றை தடுக்கும் மருந்து தயாரிப்பில், பொட்டாஷியம் கிளாவு லனேட் பயன்படுகிறது. நீர்ம பொட்டாஷியம் கிளாவுலனேட்டின் குறைந்தபட்ச இறக்குமதி விலை, ஒரு கே.ஜி.ஏ.,வுக்கு, அதாவது ஒரு கிலோவில் உள்ள செயல்திறன் மிக்க மூலப்பொருள், 16,200 ரூபாய். கொழுப்பை குறைக்க பயன்படும் மருந்து தயாரிப்புக்கு உதவும் ஏ.டி.எஸ்., - 8 என்ற இடைநிலை மூலப்பொருளின் இறக்குமதி விலை, கிலோவுக்கு 9,990 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி விலை கட்டுப்பாடு, 2026 நவம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிகிறது. எனவே, இம்மருந்துகள், மூலப்பொருட்களை இதற்கும் குறைவான விலையில் இறக்குமதி செய்ய முடியாது. ஆனால், இந்த குறைந்தபட்ச இறக்குமதி விலை என்ற கட்டுப்பாட்டின் வாயிலாக உள்நாட்டின் மருந்து உற்பத்தி அதிக செலவாகும் எனவும், அதனால் மருந்துகளின் விலை அதிகரிக்கும் எனவும் மருந்துத்துறை வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.