அரிசி தவிடு ஏற்றுமதி தடையை நீக்கியது அரசு
புதுடில்லி:எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு மீதான ஏற்றுமதி தடையை மத்திய அரசு விலக்கியுள்ளது. இது கால்நடை தீவனமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு ஏற்றுமதிக்கு கடந்தாண்டு தடை விதிக்கப்பட்டது. உள்நாட்டு சுத்திகரிப்பாளர்களின் நலன் காக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் இதன் மீதான தடையை நீக்க வேண்டும் என எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியது. இதை ஏற்று அரிசிதவிடு மீதான ஏற்றுமதி தடையை உடனடியாக விலக்குவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மற்றுமொரு அறிவிப்பில், பூட்டானுக்கான குறிப்பிட்ட சில அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் இருந்தும் விலக்கு அளித்து உள்ளது. பால் பொருட்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு, அரிசி, கோதுமை, தேயிலை, சோயாபீன் எண்ணெய் உள்ளிட்டவை இதில் அடங்கும். அதேபோல இந்தோனேசியாவுக்கான கோதுமை விதை ஏற்றுமதிக்கும் ஒருமுறை அனுமதி வழங்கியுள்ளது. கர்நாடகாவின் தார்வாட் பல்கலையில் இருந்து 100 டன் கோதுமை விதை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஏற்றுமதி தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.