உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அரசு ரூ.4.40 கோடி நிதியுதவி 

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அரசு ரூ.4.40 கோடி நிதியுதவி 

சென்னை:தமிழக அரசின் எஸ்.சி., - எஸ்.டி., புத்தொழில் நிதி திட்டத்தின் கீழ், மூன்று 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, 4.40 கோடி ரூபாய் மானியத்திற்கான பங்கு தொகையை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், சென்னை ஸ்டார்ட்அப் டி.என்., அலுவலகத்தில் வழங்கினார். பின், கோவையில் அக்., 9, 10ல் நடக்கும் உலகபுத்தொழில் மாநாடு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், ஸ்டார்ட் அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அமைச்சர் அன்பரசன் கூறியதாவது: உலக 'ஸ்டார்ட்அப்' மாநாட்டில், பல்வேறு நாடுகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள், 10 மத்திய அரசின் துறைகள், 10க்கும் மேற்பட்ட தமிழக அரசு துறைகள், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதுவரை, 10,000 பேர் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இதை மேலும் அதிகப்படுத்த வேண்டும். எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு தேவையான, ஏ.ஐ., தொழில்நுட்பம், ஏரோ ஸ்பேஸ், பயோடெக்னாலஜி, ரோபோடிக்ஸ் போன்ற துறைகளின், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழக 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு தேவையான அறிவியல் தொழில்நுட்பங்களை பெறும் வகையில், மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !