பசுமை ஹைட்ரஜன் ஆலைகளுக்கு 7,000 மெகா வாட் மின்சாரம் தேவை
சென்னை, நவ. 7-தமிழகத்தில் பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உற்பத்திக்கு மட்டும், தினமும் 7,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய அரசு, தமிழகத்தில் துாத்துக்குடி மாவட்டத்தில், பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உற்பத்தி முனையம் அமைக்க அனுமதி அளித்துள்ளது. பசுமை அமோனியா
சிங்கப்பூரை சேர்ந்த, 'செம்ப்கார்ப்' நிறுவனம், 36,238 கோடி ரூபாய் முதலீட்டில், பசுமை ஹைட்ரஜன் ஆலை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த ஆகஸ்டில் நடந்தது. திருநெல்வேலி, கங்கைகொண்டானில், கே.ஆர்.ஆர்., ஏர் நிறுவனம், பசுமை அமோனியா உற்பத்தி ஆலை அமைக்கிறது. இதேபோல், பல நிறுவனங்களும் பசுமை ஹைட்ரஜன், அமோனியா உற்பத்தி ஆலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளன. இதற்காக, காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை உள்ளடக்கிய பசுமை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.எனவே, தமிழக மின் தேவையில், பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உற்பத்தி ஆலைகளுக்கு மட்டும், வரும் 2031 - 32ல் தினமும், 7,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. மின் வழித்தடம்
இந்த மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல, மத்திய மின் தொடரைமைப்பு கழகம், 2,600 கோடி ரூபாய் செலவில் துாத்துக்குடியில் மின் வழித்தடங்களை அமைக்க உள்ளது. அதற்கு ஏற்ப, கூடுதல் வழித்தடங்களை அமைக்குமாறு மின் வாரியத்தை, மத்திய மின் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக மின் தேவை தற்போது தினமும் சராசரியாக, 15,000 மெகா வாட்டாக உள்ளது. கோடை காலத்தில், 20,000 மெகா வாட் வரை அதிகரிக்கிறது.