மருத்துவ காப்பீடு செலவை சமாளிப்பது எப்படி?
பல்வேறு காரணங்களால் மருத்துவ காப்பீடு பிரீமியம் அதிகரித்து வரும் நிலையில், பல ஆண்டு பாலிசிகளை நாடுவது ஏற்றதாக இருக்குமா?பணவீக்கம் போலவே மருத்துவ பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மருத்துவ காப்பீடு பாலிசிகளுக்கான பிரீமியம் தொகையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, மருத்துவ காப்பீடு பாலிசிதாரர்களில், 52 சதவீதம் பேர் தங்கள் பிரீமியம் உயர்ந்ததாக தெரிவித்துள்ளனர் என்று லோகல்சர்கிள் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இதில் கணிசமானோர், பிரீமியம் தொகை 25 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறியுள்ளனர். அதிகரிக்கும் மருத்துவ செலவுகள் கூடுதல் சுமையாக மாறியுள்ள நிலையில், மருத்துவ காப்பீடு பிரிமியம் செலவுகளை சமாளிப்பது எப்படி எனும் கேள்வி எழுகிறது. பல ஆண்டு பாலிசிகள்
மருத்துவ காப்பீடு பாலிசி பிரீமியம் அதிகரிக்க பலவித காரணங்கள் இருப்பது போலவே, இதை சமாளிக்கவும் பல வழிகள் இருக்கின்றன. இவற்றில், பல ஆண்டு பாலிசி வழி அண்மைக்காலமாக பிரபலமாகி வருகிறது. மருத்துவ காப்பீடு பாலிசிகளை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். மாறாக, துவக்கத்திலேயே அடுத்து வரும் ஆண்டுகளுக்கும் சேர்த்து பிரீமியம் செலுத்தும் வகையில் பல ஆண்டு பாலிசி அமைகிறது. இவ்வாறு மூன்று அல்லது ஐந்தாண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தி பாலிசி பெறலாம். பாலிசி காலத்திற்கு முதலிலேயே மொத்தமாக பிரிமியம் செலுத்துவதால், இடைப்பட்ட காலத்தில் பிரீமியம் அதிகரிக்காது.பல ஆண்டு மருத்துவ காப்பீடு பாலிசிகளை பெரும்பாலான முன்னணி காப்பீடு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த பாலிசியை தேர்வு செய்யும் முன்னர் இவை செயல்படும் விதம், சாதக, பாதக அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மொத்தமாக பிரீமியம் தொகையை செலுத்துவதால், பிரீமியம் அதிகரிக்க வாய்ப்பில்லை என்பது இதன் முக்கிய சாதகமாகும். ஆனால், முன்னதா கவே அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் அதிக தொகை செலுத்துவது சிக்கலாக இருக்கலாம். சாதக அம்சங்கள்
பல ஆண்டு பாலிசிகள் பெறும் போது, காப்பீடு நிறுவனங்கள் தள்ளுபடி அளிப்பது கூடுதல் சேமிப்பாக அமையும். காப்பீடு நிறுவனங்களுக்கு ஏற்ப இது அமையலாம். மேலும், காப்பீட்டை உரிய காலத்தில் புதுப்பிக்க மறக்கும் சிக்கலை பாலிசி காலத்தில் தவிர்க்கலாம். பல ஆண்டு பாலிசி முடியும் போது புதுப்பித்தல் நினைவூட்டல் வழங்கப்படும். பாலிசி பலன்கள், அம்சங்களை பொறுத்தவரை, வழக்கமான பாலிசி போலவே அமைந்திருக்கும். கிளைம் கோரிக்கை நடைமுறையும் பொருந்தும். பாதுகாப்பு தொகையும் பாலிசி காலத்தில் ஆண்டுதோறும் தொடரும். மற்ற விதிகள், நிபந்தனைகளும் பொருந்தும். வளைந்து கொடுக்கும் அம்சங்கள் கொண்ட ஒரு சில கூடுதல் சலுகைகளும் கூட அளிக்கப்படலாம்.வரிச்சலுகை அம்சங்களிலும் மாற்றம் இல்லை. பல ஆண்டு பாலிசிகள் பல்வேறு சாதகமான அம்சங்களை கொண்டுள்ளன என்றாலும், மூன்று அல்லது ஐந்தாண்டுகளுக்கு பின் பாலிசியை புதுப்பிக்கும் போது, பணவீக்கம் மற்றும் பாலிசிதாரர் வயதுக்கு ஏற்ப பிரீமியம் தொகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் துவக்கத்திலேயே மொத்தமாக பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். பாலிசிதாரர்கள் தொடர்புடைய அம்சங்களை பரிசீலித்து தங்களுக்கு ஏற்றதாக இருக்குமா என தீர்மானிக்க வேண்டும்.