உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்க வரி விதிப்பு முதலீடுகளை எப்படி பாதிக்கும்?

அமெரிக்க வரி விதிப்பு முதலீடுகளை எப்படி பாதிக்கும்?

செய்திகள் அல்லது வதந்திகளுக்கு ஏற்ப முதலீட்டாளர்கள் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர இறக்குமதி வரி சர்வதேச சந்தையிலும், இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்க நடவடிக்கையால் ஏற்படக்கூடிய வர்த்தகப் போர் தொடர்பான அச்சமும் தாக்கம் செலுத்தும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை, அமெரிக்க வரி விதிப்பு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றாலும், போட்டி நாடுகளுக்கான பாதிப்பை விட குறைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

பொருளாதாரம்

அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை, 2008ல் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலை மற்றும் 2020ம் ஆண்டு கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு பொருளாதார பரப்பை பாதிக்க கூடிய முக்கிய நிகழ்வாக இருக்கும் என, வல்லுநர்கள் கருதுகின்றனர். இதன் தாக்கம் ஏற்கனவே பங்குச்சந்தையில் பிரதிபலித்துள்ளது. தொடர்ந்து சந்தையில் ஏற்ற இறக்கமான போக்கு நிலவலாம் என்கின்றனர். இந்நிலையில், முதலீடுகள் மீது ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் முதலீட்டாளர்கள் யோசிக்கத்துவங்கியுள்ளனர். பங்குகள், தங்கம், கடன் சார் முதலீடு ஆகியவற்றின் மீதான தாக்கம் எப்படி இருக்கும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இறக்குமதி வரி, இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி ஏற்கனவே சுணக்கம் கண்டுள்ள சூழலில், இது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர். எனினும், ஒப்பீடு நோக்கில் இந்தியா நல்ல நிலையிலேயே இருப்பதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவில் தேக்க நிலை உண்டாகலாம் எனும் அச்சமும் இருக்கிறது. நிச்சயம் இதன் தாக்கம் பங்குச்சந்தையில் இருக்கும் என்கின்றனர்.

ஏற்ற அணுகுமுறை

பங்கு முதலீட்டாளர்கள், நாடுகளின் பதில் நடவடிக்கை மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நுகர்வோர் பங்குகள் சூழலை தாக்குப்பிடிக்கலாம் என்றும், சுழற்சி சார்ந்த துறைகளில் பாதிப்பு இருக்கும் என்றும் கருதுகின்றனர். சர்வதேச போக்குகளில் இருந்து பொருளாதாரத்தை காக்க, நிதி சந்தையை நிலைப்படுத்த ரிசர்வ் வங்கி ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் கருதப்படுகிறது. வர்த்தக போர், பண்டகங்கள் விலை மற்றும் ரூபாயின் போக்கில் ஏற்ற இறக்கத்தை கொண்டு வரலாம் என்கின்றனர். எனினும், பத்திரங்கள் உள்ளிட்ட நிலையான வருமான சாதனங்கள் ஈர்ப்புடையவயாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ள சூழலில் கடன்சார் நிதிகள் நல்ல பலனை அளிக்கலாம். தங்கம் மற்றும் வெள்ளியின் விலை போக்கும் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. சந்தையின் ஏற்ற இறக்கமான போக்கு நல்ல பங்குகளை குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பை அளிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. முதலீட்டாளர்களை பொறுத்தவரை, நிலைமைக்கு ஏற்ப எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றுவது ஏற்றதாக இருக்கும் என்றாலும், செய்திகள் அல்லது வதந்திகளுக்கு ஏற்ப செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். அச்சம் காரணமாக நடவடிக்கை எடுக்காமல், அடிப்படை அம்சங்களை மனதில் கொண்டு செயல்படுவது பொருத்தமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி