சம பங்கு நிதிகளில் அதிகரிக்கும் முதலீடு
மியூச்சுவல் பண்ட் பரப்பில் சம பங்கு நிதிகளில் மீண்டும் ஆர்வம் அதிகரித்து, ஜூன் மாதம் நிகர முதலீடு மாதாந்திர அடிப்படையில் 24 சதவீதம் உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்படி, சம பங்கு நிதிகளில் நிகர முதலீடு, மே மாதம் 19,013 கோடியாக இருந்தது, ஜூன் மாதம் 23,587 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு, இந்த பிரிவில் நிகர முதலீடு வரத்து அதிகரித்துள்ளது.சம பங்கு நிதிகளின் ஆர்வம், முதலீட்டாளர்கள் நம்பிக்கை மற்றும் சந்தையின் வலுவான செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு உள்ளதாக கருதப்படுகிறது. மிட்கேப், ஸ்மால்கேப், பிளக்சி கேப் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் முதலீடு அதிகரித்துள்ளது.இதே போல, தங்க இ.டி.எப்., நிதிகளில் முதலீடு வரத்து 10 மடங்கு அதிகரித்து, கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத உச்சம் தொட்டுள்ளது. குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்த நிதிகளிலும் முதலீடு ஆர்வம் அதிகரித்துள்ளது. கடன்சார் நிதிகளிலும் முதலீடு மேம்பட்டுள்ளது. குறுகிய கால நிதிகளிலும் முதலீட்டாளர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதே போல, வர்த்தக பத்திர நிதிகளும் அதிக முதலீட்டை ஈர்த்துள்ளன.