இந்தியா - இ.எப்.டி.ஏ., ஒப்பந்தம் அக்., 1ல் நடைமுறைக்கு வருகிறது
புதுடில்லி:இந்தியா மற்றும் இ.எப்.டி.ஏ., எனும் நான்கு ஐரோப்பிய நாடுகளிடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. ஐஸ்லாந்து, லீக்கின்ஸ்டைன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நான்கு ஐரோப்பிய நாடுகளுடன், இந்தியா கடந்தாண்டு மார்ச் மாதம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி, அடுத்த 15 ஆண்டுகளில் இந்நாடுகள் இந்தியாவில் 8.80 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக உத்தரவாதம் அளித்துள்ளன. ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்த முதல் 10 ஆண்டுகளுக்குள் 4.40 லட்சம் கோடி ரூபாயும்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் மீதமுள்ள 4.40 லட்சம் கோடி ரூபாயும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இதன் வாயிலாக, இந்தியாவில் 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரி விதிப்பை தளர்த்தவும், பூஜ்ஜியமாக குறைக்கவும் இந்தியா முன்வந்துள்ளது. இதனால், ஸ்விஸ் கைகடிகாரங்கள், சாக்லேட்டுகள் மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுவிட்சர் லாந்து அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், “முதல் முறையாக ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில், வர்த்தகம் மற்றும் நிலை யான வளர்ச்சிக்கான சட்ட விதிகளை இந்தியா வகுத்து உ ள்ளது. இது ஒப்பந்தத்தின் சட்டப்பூர்வ நிச்சயத்தன்மையை அதிகரிக்கிறது. “ இந்த ஒப்பந்தத்தால், தங்கம் தவிர்த்து, இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்தின் 95 சதவீத ஏற்றுமதி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது,” என தெரிவித்துஉள்ளது.