உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டாப் 10 காபி உற்பத்தி நாடுகள் ஒரு இடம் முன்னேறிய இந்தியா

டாப் 10 காபி உற்பத்தி நாடுகள் ஒரு இடம் முன்னேறிய இந்தியா

புதுடில்லி:காபி உற்பத்தியில், உலக அளவில் ஒரு இடம் முன்னேறி, இந்தியா ஏழாம் இடம் பிடித்து உள்ளது.இந்திய காபி ஏற்றுமதி, 2020-21ல் 6,100 கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 10,900 கோடி ரூபாயை எட்டியது. இதன் வாயிலாக, காபி உற்பத்தியில் உலகின் எட்டாவது இடத்தில் இருந்த இந்தியா, பெரு நாட்டை பின்னுக்கு தள்ளி ஏழாம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் காபி உற்பத்தி மட்டுமின்றி காபி குடிப்பதும் அதிகரித்து வருவது, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிபரத்தில் தெரிய வந்துஉள்ளது. இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், 9,300 டன் காபியை இத்தாலி, பெல்ஜியம், ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2021ல் 84,000 டன்களாக இருந்த இந்திய காபி பயன்பாடு, 2023 இறுதி நிலவரப்படி 91,000 டன்களாக அதிகரித்தது. காபி உற்பத்தியில் 2.48 லட்சம் டன்களுடன் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. கேரளா, தமிழகம் ஆகியவை அடுத்த இரண்டு இடங்களை வகிக்கின்றன.இந்தியாவில் அராபிகா, ரோபஸ்டா என்ற இரண்டு வகை காபி உற்பத்தியும் நடைபெறுகிறது. எனினும், மொத்த உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கை அராபிகா வகை காபி வகிக்கிறது. வறுக்காத காபி கொட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இன்ஸ்டன்ட் காபி உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட காபி ரகங்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளது.காபி ஷாப் சந்திப்பு கலாசாரம், செலவழிக்க ஏதுவான வருவாய் அதிகரிப்பு ஆகிய காரணங்கள், தேநீரை விட காபியின் தேவையை அதிகரிக்கச் செய்கின்றன. நகரம், கிராமம் என்ற வேறுபாடின்றி, காபி குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காபி உற்பத்தி டாப் 10 நாடுகள்

 பிரேசில் வியட்நாம் கொலம்பியா இந்தோனேசியா ஹூண்டுராஸ் எத்தியோப்பியா இந்தியா பெரு கவுதமாலா உகாண்டா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை