சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை இ.எம்.ஐ.,க்கு செலுத்தும் இந்தியர்கள்
புதுடில்லி:இந்தியர்கள், தங்களது சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை, இ.எம்.ஐ., எனப்படும் கடன் தவணையாக செலுத்துவதாக, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்தியர்கள் எவ்வாறு செலவு செய்கின்றனர் என்பது குறித்து அறிந்துகொள்ள, 'பி.டபிள்யு.சி.,' மற்றும் 'பெர்பியோஸ்' நிறுவனங்கள் இணைந்து, சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளன. நிதி தொழில்நுட்ப சேவைகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தும் 30 லட்சம் நபர்களிடம் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. பெருநகரங்கள் மட்டுமல்லாது; மூன்றாம் கட்ட நகரங்கள் வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றவர்களின் மாத வருமானம் 20,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இருந்தது. இதில், இந்தியர்கள் தங்களது சம்பளத்தில் 39 சதவீதத்தை, கடனைத் திருப்பிச் செலுத்தவும்; காப்பீடு பிரீமியம் செலுத்தவும் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இதனிடையே, குறைந்த வருமானம் பெறுபவர்கள் வங்கி போன்ற முறையான வழிகளைக் காட்டிலும், நண்பர்கள், உறவினர்கள், வட்டி அல்லது அடகு கடை களின் வாயிலாகவே பெரும்பாலும் கடன் வாங்குவது தெரிய வந்துள்ளது.அறிக்கையில், செலவுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கட்டாய செலவுகள், தேவையான செலவுகள் மற்றும் விருப்பச் செலவுகள். கடனைத் திருப்பிச் செலுத்துவது, காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகை செலுத்துவது ஆகியவை கட்டாய செலவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் கேமிங், உணவு ஆர்டர், பொழுதுபோக்கு போன்றவை விருப்பச் செலவுகளாகவும்; அடிப்படை வீட்டுத் தேவைகளான குடிநீர், மின்சாரம், எரிபொருள், மருந்து ஆகியவை தேவைகளாகவும் பிரிக்கப்பட்டுஉள்ளது.
செலவு செய்யும் விதம் (%)
கட்டாய செலவுகள் 39 தேவையான செலவுகள் 32விருப்பச் செலவுகள் 29
மொத்த வருமானத்தில் இ.எம்.ஐ., பங்கு (%)
ஆரம்ப நிலை பணியாளர்கள் 35நீண்ட கால பணியாளர்கள் 40நடுத்தர வருமானம் பெறுவோர் 44 அதிக வருமானம் பெறுவோர் 46
தேவையான செலவுகளின் உட்பிரிவு (%)
குடிநீர், மின்சாரம் 30அன்றாட தேவை 18வீட்டு வாடகை 16மருந்து 15எரிபொருள் 10பிற 12
விருப்ப செலவுகளின் உட்பிரிவு (%)
ஆடை, அலங்கார பொருட்கள் 63ஆன்லைன் கேமிங் 14உணவு 13பொழுதுபோக்கு 3மது 3பயணம் 1பிற 3