உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்திய நிலக்கடலைக்கு தடை ஏன் இந்தோனேஷியாவிடம் கேள்வி

இந்திய நிலக்கடலைக்கு தடை ஏன் இந்தோனேஷியாவிடம் கேள்வி

புதுடில்லி:இந்திய நிலக்கடலை இறக்குமதிக்கு தடை விதித்தது தொடர்பாக இந்தோனேஷியாவிடம், இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இந்திய நிலக்கடலையில் அதிக அளவு அப்லாடாக்சின் என்ற விஷப்பொருள் இருப்பதால், இந்தியாவில் இருந்து நிலக்கடலை இறக்குமதி செய்ய இந்தோனேஷியா தற்காலிக தடை விதித்து உள்ளது. கடந்த 3ம் தேதி முதல் தடை அமலில் உள்ளது. இது தொடர்பாக ஏற்றுமதியாளர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இந்தோனேஷியா அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. எனினும், இந்தோனேஷியா தரப்பில் இதுவரை பதில் தரப்படவில்லை என கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு மேல் தடை நீடிப்பதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து ஏற்றுமதியாளர்கள் தெரிவித்து உள்ளதாவது: இந்தோனேஷிய தனிமைப்படுத்தல் ஆணையம், மூன்று மாதங்களுக்கு பின், நிலக்கடலையில் அப்லாடாக்சின் இருப்பதாக கூறுகிறது. மூன்று மாதங்கள் நிலக்கடலையை எவ்வாறு சேமித்து வைத்திருந்தனர். சேமிப்பு கிடங்குகளில் எந்த மாதிரியான வசதிகள் இருந்தது என்பது தெரியவில்லை. துறைமுகத்தில் சரக்குகளை இறக்கி, மூன்று மாதங்களுக்கு பின், இது போன்று கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. இறக்குமதி பொருட்கள் மீதான இந்தோனேஷியாவின் தரக்கட்டுப்பாடு சோதனை, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை