உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  பேட்டரி சேமிப்பு திட்ட ஏலம் தொழில்துறையினர் கவலை

 பேட்டரி சேமிப்பு திட்ட ஏலம் தொழில்துறையினர் கவலை

புதுடில்லி: பேட்டரி சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய ஏலங்களில், மிகக் குறைந்த விலைக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்படுவது, இவற்றின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து, இத்துறையினரிடையே பெரும் கவலைகளை ஏற்படுத்திஉள்ளது. வரும் 2030க்குள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 500 ஜிகாவாட்டாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய, மின்சாரத்தை சேமித்து வைக்கும் பேட்டரி சேமிப்பு அமைப்புகள் மிகவும் அவசியமாக பார்க்கப்படுகின்றன. இந்திய எரிசக்தி சேமிப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது: ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பேட்டரி சேமிப்பு திட்டங்களுக்கான ஏலத்தில், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 1.50 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒரு யூனிட் 4.50 ரூபாய் என்பது ஆரோக்கியமான விலையாக கருதப்படும் நிலையில், இது மிகவும் குறைவாகும். வரும் 2032க்குள் இந்தியாவிற்கு 236 ஜிகாவாட் பேட்டரி சேமிப்புத் திறன் தேவை. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், 83 ஜிகாவாட் அளவிற்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, 500 மெகாவாட் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மேலும், மிகக் குறைந்த விலைக்கு டெண்டர் கோரப்படுவதால், இதை செயல்படுத்த தரமற்ற வெளிநாட்டு இறக்குமதி பேட்டரிகள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இது அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் தீ விபத்து போன்ற பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசு டெண்டர் விதிமுறைகளை திருத்தி, உள்நாட்டு பேட்டரி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளது. பேட்டரி சேமிப்பு திட்டங்களுக்கான ஏலத்தில், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 1.50 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒரு யூனிட் 4.50 ரூபாய் என்பது ஆரோக்கியமான விலையாக கருதப்படும் நிலையில், இது மிகவும் குறைவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை