முதலீடுகளை மேற்கொள்ள ஏ.ஐ., ஆலோசனை ஏற்றதா?
ஏ.ஐ., சேவைகள் பயனுள்ளதாக அமையும் என்றாலும், நிதி பயணத்தில் அவற்றின் ஆலோசனைகளை நாடுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.எல்லா துறைகளிலும், ஏ.ஐ., என குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவு சேவைகளின் பயன்பாடும், தாக்கமும் அதிகரித்து வருகிறது. நிதித்துறையிலும் ஏ.ஐ., சார்ந்த புதுமையான சேவைகள் அறிமுகம் ஆகி வருகின்றன. மேலும், பல துறைகளில் எளிதாக பதில் பெற சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏ.ஐ., சாட்பாட்களை பலரும் நாடுவது போல, நிதி ஆலோசனைகளை பெறவும் இந்த சேவைகளை பயன்படுத்துவதை அறிய முடிகிறது. அதிலும் குறிப்பாக, நவீன கால இளம் தலைமுறையினர் பலரும் நிதி திட்டமிடல் உள்ளிட்டவற்றில் ஏ.ஐ., ஆலோசனைகளை நாடுகின்றனர்.
எச்சரிக்கை தேவை
நிதி திட்டமிடல் தொடர்பான தகவல்களை ஏ.ஐ., சாட்பாட்களிடம் பெறுவதில் தவறில்லை என்றாலும், ஏ.ஐ., ஆலோசனைகளை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவது சரியல்ல என நிதி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக, ஏ.ஐ., ஆலோசனைகள் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை மேற்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கின்றனர். நிதி வழிகாட்டுதல் தேவைப்படும் போது சாட்பாட்களிடம் கேட்டு பதில் பெறுவது எளிதாக இருக்கலாம். நிதி புத்தகங்கள், இணையதளங்கள் போன்றவற்றை படித்துப்பார்த்து தேர்வு செய்வதைவிட, சாட்பாட்கள் உடனடியாக அளிக்கும் நேரடி பதில்கள் ஏற்றதாக தோன்றலாம். ஆனால், சாட்பாட்கள் அளிக்கும் பதில்கள் பொதுவானவை என்பதையும், குறிப்பிட்ட முதலீட்டாளர்களின் தேவைகள் மாறுபடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஐந்தாண்டுகளில் முதலீட்டை இரட்டிப்பாக்குவது எப்படி என சாட்ஜிபிடியிடம் கேட்டால், 60 சதவீதம் மியூச்சுவல் பண்டுகளிலும், 40 சதவீதம் நேரடி பங்குகளிலும் முதலீடு செய்யுமாறு ஆலோசனை அளித்ததாக ஏ.ஐ., பயன்பாடு தொடர்பான வர்த்தக நாளிதழ் அலசல் கட்டுரை குறிப்பிடுகிறது. எனினும், இந்த ஆலோசனையை பின்பற்றி பங்குகளில் முதலீடு செய்தவர் நஷ்டம் அடைந்திருக்கிறார். சாட்பாட்கள் தகவல்களை அலசி ஆராய்ந்து உடனடியாக பதில் அளிக்க கூடியவை என்றாலும், நிதி ஆலோசகர்கள் போல முதலீட்டாளர்களின் நிதி சூழல், தனிப்பட்ட அம்சங்களை கருத்தில் கொள்வதில்லை. நிதி ஆலோசகர்கள்முதலீடு தொடர்பான ஆலோசனைகள் வழங்கும் போது, துணை கேள்விகள் பலவற்றை கேட்டு, முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பையும், நிதி சூழலையும் புரிந்துகொண்டு வழிகாட்டுகின்றனர். நிதிக்கல்வி
அதற்காக, நிதி விஷயங்களுக்கு ஏ.ஐ., சேவைகளை பயன்படுத்தக்கூடாது என்று பொருள் இல்லை. எதற்காக, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். சாட்பாட்கள் அளிக்கும் வழிகாட்டுதலை சீர் துாக்கி பார்ப்பதற்கான நிதி கல்வியறிவும் இருப்பது அவசியம். அடிப்படை தகவல்களை பெற சாட்பாட்களை பயன்படுத்தலாம். ஆனால், அவற்றின் அடிப்படையில் முதலீடு முடிவுகளை பயனாளிகளே மேற்கொள்ள வேண்டும். பல்வேறு கட்டுரைகளை படித்துப்பார்க்க நேரம் இல்லாவிட்டால், சாட்பாட்கள் மூலம் அவற்றின் சாரம்சத்தை தெரிந்து கொள்வது நேரத்தை மிச்சமாக்கும். அதே போல சாட்பாட்கள் செயல்படும் விதம் பற்றிய புரிதலும் தேவை. சரியான பதில்களை பெற, கேள்விகளை எப்படி குறிப்பிட்டத் தன்மை கொண்டதாக அமைக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். துணைக்கேள்விகள் மூலம் பதில்களை மெருகேற்றும் திறனும் அவசியம். பங்குகள் தொடர்பான தகவல்களை பின்தொடர, முதலீடு தவணை தொடர்பான நினைவூட்டல் வழங்க போன்ற செயல்களுக்கும் ஏ.ஐ., சேவைகளை பயன்படுத்தலாம்.