உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனம் அவர்களிடம் விசுவாசத்தை எதிர்பார்க்க கூடாது பிரெஷ்வொர்க்ஸ் குறித்து ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்

ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனம் அவர்களிடம் விசுவாசத்தை எதிர்பார்க்க கூடாது பிரெஷ்வொர்க்ஸ் குறித்து ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்

சென்னை:மென்பொருள் நிறுவனமான 'பிரெஷ்வொர்க்ஸ்' 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்ததை, 'ஜோஹோ' நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.சமூக வலைதளத்தில் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டதில் கூறியிருப்பதாவது:ஒரு வணிகம் தள்ளாடும் போதோ, வருவாய் இழப்பை சந்திக்கும்போதோ அல்லது தொடர் நஷ்டம் ஏற்பட்டாலோ, ஆட்குறைப்பு செய்யும் துரதிருஷ்டமான சூழ்நிலையை புரிந்து கொள்ளலாம்.

பேராசை

ஆனால், ஒரு நிறுவனம், கிட்டத்தட்ட 8,400 கோடி ரூபாய், அதாவது, அதன் ஆண்டு வருமானத்தில் ஒன்றரை மடங்கு மற்றும் 20 சதவீத சராசரி வளர்ச்சியில் லாபம் ஈட்டி வரும் போது, ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை என்னவென்று சொல்வது? இதற்கும் மேலாக, 3,400 கோடி மதிப்புள்ள பங்குகளை, சந்தையில் இருந்து வாங்குவதற்கு அந்நிறுவனத்திடம் பணம் இருக்கிறது.இந்நிலையில், தன் மொத்த ஊழியர்களில் 12 முதல் 13 சதவீதம் பேரை நீக்குவதை, அப்பட்டமான பேராசை என்று தான் கூற முடியும். அப்படிப்பட்ட நிறுவனம், ஊழியர்களிடம் விசுவாசத்தை எதிர்பார்க்கக் கூடாது.ஜோஹோ நிறுவனத்தில், எங்கள் வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் தான் முதன்மையானவர்கள். பங்குதாரர்களுக்கான இடம் கடைசிதான். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு பதிவில் தெரிவித்துள்ளார்.

வழக்கு

ஜோஹோ மற்றும் பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனங்கள் இடையே, நேரடி வர்த்தக போட்டி என்பது கடந்த கால வரலாறு. ஜோஹோவில் பணியாற்றிய கிரிஷ் மாத்ருபூதம் என்பவர், அங்கிருந்து வெளியேறி 2010ல் துவங்கிய நிறுவனம் பிரெஷ்வொர்க்ஸ். தன் ரகசிய தகவல்களை பிரெஷ்வொர்க்ஸ் திருடியதாக ஜோஹோ நிறுவனம், 2020ல் வழக்கு தொடர்ந்தது.ஜோஹோ நிறுவனத்தில் இருந்து வந்த முன்னாள் ஊழியர், தவறுதலாக ரகசிய தகவல்களை தெரிவித்ததாக ஒப்புக் கொண்ட பிரெஷ்வொர்க்ஸ், வழக்கில் 2021ல் சமரசம் ஏற்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.ஒரு வணிகம் தள்ளாடும்போதோ, வருவாய் இழப்பை சந்திக்கும் போதோ, ஆட்குறைப்பு செய்யும் துரதிருஷ்டமான சூழ்நிலையை புரிந்து கொள்ளலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ