அதிக சோடா சாம்பல் கையாண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் சாதனை
சென்னை:காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் 35,000 மெகா டன் சோடா சாம்பல் சிப்பங்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்து, காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை அருகில் உள்ள அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் அனைத்து வகை தரமான சேமிப்பு கிடங்குகள், சிப்பங்களை கட்டும் இடம், இயந்திரங்களை கொண்டு ஏற்றுமதிக்கான பொருட்களை விரைவாக கப்பல்களில் சீராக அடுக்குதல் போன்ற வசதிகளை கொண்டு உள்ளது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் இத்துறைமுகம் ஒரு தனித்தன்மையை பெற்றுள்ளது. அதிக அளவில் சிப்பங்களை ஏற்றுமதி செய்து வருவதால் காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், இந்திய சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அதிக அளவில் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற இலக்கை அடைந்து வருகிறது. இந்திய அளவில் சிறந்த ஏற்றுமதிக்கான கட்டுமான வசதிகளை பெற்றுள்ள துறைமுகமாக விளங்குகிறது. இங்கிருந்து 35,000 மெகா டன் சோடா சாம்பல் சிப்பங்களை கையாண்டதன் வாயிலாக, அனைத்து இந்திய துறைமுகங்களில் அதிக அளவில் தனிப்பட்ட சிப்பங்களை கையாண்ட பெருமையை காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் பெற்றுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் பிளை ஆஷ் நெகிழ்வுத்தன்மை கொள்வதற்காக சேர்க்கப்படும் சோடியம் கார்பனேட் கலந்த சாம்பல், சோடா சாம்பல் எனப்படுகிறது.