அதிக தரத்திலான வாத்து இறைச்சி இறக்குமதிக்கு உரிமம் அவசியம்
புதுடில்லி:பிரீமியம் எனப்படும் விலை உயர்ந்த, உறைநிலையில் பதப்படுத்தப்பட்ட வாத்து இறைச்சியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி பெறுவதை, மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்காக, பிரத்யேக இறக்குமதி உரிமம் பெறுவது தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. டி.ஜி.எப்.டி., எனும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடம் இருந்து இறக்குமதிக்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இறக்கு மதியாளர்களுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இவற்றை நேரடியாக இறக்குமதி செய்யும் ஸ்டார் ஹோட்டல்களுக்கு இது பொருந்தாது. இறக்குமதியாளர்கள், 3 ஸ்டார் மற்றும் அதற்கு மேற்பட்ட குறியீட்டை பெற்ற ஹோட்டல்களுக்கு மட்டுமே இவை வினியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவணங்களை இறக்குமதியாளர் தொடர்ந்து பராமரித்து வர வேண்டும் என்றும்; அடுத்த முறை இறக்குமதி உரிமம் பெறும்போது, ஜி.எஸ்.டி., ரசீதுடன் சேர்த்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றாவிடில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.ஜி.எப்.டி., தெரிவித்துள்ளது.மலேஷியா மற்றும் தாய்லாந்து நாடுகளிலிருந்தே, விலை உயர்ந்த உறைந்த வாத்து இறைச்சிகள் நம் நாட்டுக்கு அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதியாளர்கள் 3 ஸ்டார் மற்றும் அதற்கு மேற்பட்ட குறியீட்டை பெற்ற ஹோட்டல்களுக்கு மட்டுமே, இவை வினியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்