ஆழ்கடல் இன்டர்நெட் கேபிள் திட்டம் இந்தியாவை இணைக்க மெட்டா முடிவு
புதுடில்லி:உலகின் மிக நீண்ட ஆழ்கடல் இன்டர்நெட் கேபிள் திட்டமான 'பிராஜெக்ட் வாட்டர்வொர்த்'ல் இந்தியாவும் இணைக்கப்பட உள்ளதாக, 'மெட்டா' நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரவுள்ள இத்திட்டம், ஐந்து கண்டங்களை உள்ளடக்கி, 50,000 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையிலும், இத்திட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைக்கப்படவுள்ள கேபிள்களின் செலவு, பராமரிப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகளை, நம்பத்தகுந்த இந்திய நிறுவனங்களைக் கொண்டே மேற்கொள்ள விரும்புவதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மெட்டா தெரிவித்திருப்பதாவது:மெட்டா அமைத்து வரும் உலகின் மிக நீண்ட, அதிக திறன் கொண்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஆழ்கடல் கேபிள் திட்டத்தில் இந்தியாவும் இணைக்கப்பட உள்ளது. இந்த கேபிள் வாயிலாக இந்தியா மற்றும் பிற நாடுகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும். தடையற்ற இணையதள பயன்பாட்டுக்கு இந்த ஆழ்கடல் கேபிள்கள் மிகவும் அவசியமாகும். இந்தியாவில் டிஜிட்டல் சேவைகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப கண்டு பிடிப்புகளை மேம்படுத்த மெட்டா உறுதி பூண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் வரை கேபிள்கள் அமைக்கப்பட உள்ளது. படகு நிறுத்தப்படுவது உள்ளிட்ட பிற காரணங்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இது போன்ற அதிக ரிஸ்க் உள்ள பகுதிகளில் கேபிள்களை பதிக்க மேம்பட்ட தொழில்நுட்ப முறைகள் கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு தெரிவித்து உள்ளது.பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் இணையதள உள்கட்டமைப்பு அமைப்பதில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மெட்டாவின் இந்த முதலீடு முக்கியத்துவம் பெறுகிறது.