உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சுரினாம் நாட்டுக்கு ராணுவ சீருடை ஆவடியில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி

சுரினாம் நாட்டுக்கு ராணுவ சீருடை ஆவடியில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி

சென்னை:ஆவடியில் உள்ள 'ஆர்டினன்ஸ் கிளாத்திங்' தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ராணுவ சீருடைகள், தென் அமெரிக்க நாடான சுரினாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ராணுவ அமைச்சகத்தின் கீழ், ஆவடியில் ஆர்டினன்ஸ் கிளாத்திங் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு நம் நாட்டின் முப்படைகளைச் சேர்ந்த ராணுவ, துணை ராணுவ வீரர்களுக்கு சீருடைகள் தயாரித்து அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், சுரினாம் நாட்டின் ராணுவத்திற்கு தேவையான சீருடைகள் இங்கு தயாரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் முதன் முறையாக அனுப்பி வைக்கப்பட்டன. சீருடை ஏற்றுமதியை, ஆவடி 'ஆர்டினன்ஸ் கிளாத்திங்' தொழிற்சாலை பொது மேலாளர் பி.எஸ். ரெட்டி, கூடுதல் பொது மேலாளர் குகன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பின் பொது மேலாளர் பி.எஸ்.ரெட்டி அளித்த பேட்டி:ஆவடியில் செயல்படும் இந்த தொழிற்சாலையில், ஆண்டுக்கு 8 முதல் 9 லட்சம் ராணுவ சீருடைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் ராணுவ உடைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. தற்போது புல்லட் புரூப் ஜாக்கெட், பாம் டிஸ்போசல் சூட் என, ராணுவத்துக்கு தேவையான பிற வகை உடைகளும் தயாரிக்கப்படுகின்றன. ஏற்றுமதியை பொறுத்தவரை, முதல் கட்டமாக, சுரினாம் நாட்டுக்கு, 4,500 ராணுவ உடைகள் அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளன. இந்த சீருடைகள் 60 முதல் 70 நாட்களில் கப்பலில் அந்நாட்டுக்கு சென்றடையும். வரும் நாட்களில் மற்ற நாடுகளும் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ